திருச்சி:
பாஜக விலகிச் சென்றால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
கூறிய பதில் தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சமீபகால பேச்சுகள் ஒருவித வியூகத்துக்கு வழிவகுத்துக் கொண்டே இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து அதிமுக கூட்டணிக்கு விசிக செல்லக்கூடும் என்ற ஐயத்தை அவரது பேச்சுகள் ஏற்படுத்துகின்றன. பாஜக கூட்டணியில் அதிமுக வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் அதிமுக கபளீகரம் செய்துவிடும் எனவும் திருமாவளவன் பல முறை பேசியுள்ளார்.
அதிமுகவுக்கு அப்படியே நேர் முரணான திமுக கூட்டணியில் இருந்துகொண்டு திருமாவளவன் இவ்வாறு பேசுவது திமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், திருமாவளவன் இந்த விஷயத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கிறார். திமுக தலைமைக்கு ஒருவித எச்சரிக்கையை கொடுப்பதற்காகவே அவர் இவ்வாறு பேசி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சிக்கு வருகை தந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், “பாஜக விலகினால் அதிமுக கூட்டணியில் இணைவீர்களா?” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு திருமாவளவன், “இது ஒரு வியூகக் கேள்வி. முதலில் பாஜக விலகட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் திருமாவளவனுக்கு இல்லை என்றால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாமே. பாஜக விலகட்டும் பார்க்கலாம் என்றால், அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் திருமாவளவனுக்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.