புதுடெல்லி: மத்திய ஆயுத காவல் படையினர், அவர்கள் பணியில் இருக்கும் கிராமத்தின் 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்று விவரங்களைச் சேகரிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த 12-ம் தேதி, மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) பொறுப்புவகிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா கலந்தாலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் எல்லை கிராமங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லை கிராமங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய ஆயுத காவல் படையினர் அந்தந்த கிராமங்கள் குறித்த 2,000 ஆண்டு கால வரலாற்று விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று அமித் ஷா உத்தரவிட்டார். எல்லை கிராமங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்க அவற்றின் வரலாறு உதவுக்கூடும் என்ற நோக்கில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
எல்லை கிராமங்களில் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று அமித் ஷா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய ஆயுத காவல் படையினர் உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், அந்த கிராமங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அம்மக்கள் வேலைக்காக வெளியிடங்களுக்கு புலம்பெயர்வது குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.