ராமனாக நானா? ஆதிபுருஷ் கதை கேட்டபோதே தயங்கிய பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ஆதிபுருஷ் படம் வெளியானது. ராமாயணத்தை பின்னணியாக கொண்டு உருவாகி இருந்த இந்த படத்தில் ராமனாக பிரபாஸ் நடித்திருந்தார். சீதையாக நடிகை கிர்த்தி சனோன் நடித்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே அதன் கதாபாத்திர தோற்றங்கள் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் குறித்து கடும் விமர்சனத்தை சந்தித்தது. அதுமட்டுமல்ல சில சர்ச்சையான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின. படம் வெளியான பிறகும் கூட இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் நிறைய கிளம்பின. இப்போதும் கூட சில மாநிலங்களில் இந்த படத்தை தடை செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
படக்குழுவினர் தரப்பிலிருந்து சில விஷயங்களுக்காக பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்து சில காட்சிகளை மாற்றும் வேலையும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் ராமனாக நடித்திருந்த பிரபாஸின் தோற்றம் ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. பிரபாஸ் இப்படி ஒரு படத்தில் நடிப்பது பற்றி கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஓம் ராவத் ஒரு பேட்டியில் கூறும்போது, “கொரோனா காலகட்டத்தில் ஜூம் கால் மூலமாக இந்த முழு கதையையும் பிரபாஸுக்கு சொன்னேன். அதை கேட்டுவிட்டு இந்த படத்தில் நான் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என என்னிடம் கேட்டார். நான் அதிர்ச்சியாகி என்ன இப்படி கேட்கிறீர்கள், ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்தில் தான் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று கூறினேன்.. உறுதியாகவா, நான் நடித்தால் சரியாக இருக்குமா என்று என்னிடம் மீண்டும் கேட்டார் பிரபாஸ்.
அதன்பிறகு நான் மும்பையில் இருந்து ஹைதராபாத் பறந்து வந்து ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பைலட் படத்தை அவருக்கு போட்டு காட்டினேன். அதை பார்த்ததும் உடனே ஒப்புக்கொண்டார் பிரபாஸ் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்பே ராமனாக நடிப்பது குறித்து பிரபாஸுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.