புதுடில்லி :’வாட்ஸாப்’ செயலியின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குரல் அழைப்புகளை தவிர்க்கும் வசதியை, ‘மெட்டா’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியை, உலக முழுதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை, ‘மெட்டா’ நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
‘மொபைல் போன்’ வாயிலாக குறுஞ்செய்திகளை பரிமாறுவது போக, வெளிநாட்டில் உள்ளவர்களை, ‘மொபைல் போன்’ வாயிலாக அழைத்துப் பேசும் குரல் அழைப்பு வசதியையும் வாட்ஸாப் செயலி அளித்து வருகிறது.
இதனால், ஐ.எஸ்.டி., அழைப்புகளுக்கான கட்டண செலவு முற்றிலுமாக குறைந்துள்ளது.
அதே நேரம், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் அழைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வாட்ஸாப் பயனாளர்களுக்கு, வியட்நாம், மலேஷியா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக புகார் எழுந்தது. அவ்வாறு வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், அவை, ‘சைபர்’ குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களிடம் இருந்து வரும் மோசடி அழைப்புகள் என, மத்திய அரசு எச்சரித்தது.
இந்த குறைபாட்டை சீர் செய்யும்படி, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து, ‘சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, பயனாளர்களின் வாட்ஸாப் தொடர்பு பட்டியலில் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும் போது, அவை நம், ‘மொபைல் போன்’ திரையில் தெரியாது.
‘ரிங் டோன்’ ஒலிக்காது. ஆனால், ‘நோட்டிபிகேஷன்’ பிரிவில், அழைப்பு வந்த தகவல் பதிவாகிவிடும். இதன் வாயிலாக, அழைத்த எண்ணை பயனாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸாப் செயலியில் உள்ள, ‘செட்டிங்க்ஸ்’ – ‘பிரைவசி’ – ‘கால்ஸ்’ ஆகியவற்றை அடுத்தடுத்து, ‘கிளிக்’ செய்து, ‘சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற வசதியை செயல்படுத்தினால், இந்த புதிய வசதியை அனைத்து பயனாளர்களும் பெற முடியும்.
இதற்கு முன், வாட்ஸாப் செயலியை, ‘அப்டேட்’ செய்து கொள்வது அவசியம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்