ஹராரே,
தகுதி சுற்று கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ‘பி’ பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டும். சூப்பர் சிக்ஸ் சுற்றில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.
தகுதி சுற்றில் ஹராரேவில் நேற்று அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மேக்ஸ் ஓ டாட் (59 ரன்), விக்ரம்ஜித் சிங் (88 ரன்) இருவரும் நேர்த்தியான தொடக்கம் தந்தனர். பின்வரிசை வீரர்களில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (83 ரன், 72 பந்து, 8 பவுண்டரி), சகிப் ஜூல்பிகர் (34 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அந்த அணியின் ஸ்கோர் 300-ஐ கடக்க உதவியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நெதர்லாந்து 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. இதில் எக்ஸ்டிரா வகையில் கிடைத்த 23 வைடு உள்பட 34 ரன்களும் அடங்கும். ஜிம்பாப்வே தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சிகந்தர் ராசா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சிகந்தர் ராசா சாதனை
அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே சிரமமின்றி எதிரணியின் பந்து வீச்சை நொறுக்கியது. கேப்டன் கிரேக் எர்வின் (50 ரன்), சீன் வில்லியம்ஸ் (91 ரன், 58 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். தொடர்ந்து ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா அதிரடி காட்டி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்ட போது, அவரது சதத்திற்கு 4 ரன் தேவையாக இருந்தது. அப்போது பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து வெற்றிக்கனியை பறித்ததுடன், தனது 7-வது சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். 54 பந்துகளில் 102 ரன்கள் (6 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசிய சிகந்தர் ராசா ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். கடந்த ஆட்டத்தில் சீன் வில்லியம்ஸ் 70 பந்துகளில் சதத்தை எட்டியது மின்னல்வேக சதமாக இருந்தது. இரு நாட்களில் அச்சாதனையை சிகந்தர் ராசா முறியடித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர்கள் 4-5 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. ஜிம்பாப்வேக்கு இது 2-வது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி இருந்தது.
அமெரிக்கா தோல்வி
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா- நேபாளம் அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த 4 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் கரண் கே.சி. கபளீகரம் செய்தார். இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் விக்கெட் கீப்பர் ஷயான் ஜஹாங்கிர் (100 ரன், 79 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) நிலைத்து நின்று சதம் அடித்து அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு வந்தார். 49 ஓவர்களில் அமெரிக்கா 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின்னர் ஆடிய நேபாள அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை ருசித்தது. அதிகபட்சமாக பிம் ஷர்கி 77 ரன்கள் (114 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இன்றைய லீக் ஆட்டங்களில் அயர்லாந்து-ஸ்காட்லாந்து, ஓமன்-ஐக்கிய அரபு அமீரகம் (பகல் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.