ஜெய்ப்பூர், விவாகரத்து பெற்ற மனைவிக்கு, ஜீவனாம்ச தொகையான 55,000 ரூபாயை, 1 மற்றும் 2 ரூபாய் நாணயங்களாக செலுத்த, அவரது கணவருக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் தசரத். இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
மனைவிக்கு மாதந் தோறும் ஜீவனாம்ச தொகையாக, 5,000 ரூபாய் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கடந்த 11 மாதங்களாக தசரத், இந்த தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தசரத்தின் குடும்பத்தினர், 11 மாத ஜீவனாம்ச தொகையை கணக்கிட்டு, 55,000 ரூபாயை, 1 மற்றும் 2 ரூபாய் நாணயங்களாக, ஏழு பெரிய பைகளில் கட்டி நீதிமன்றத்துக்கு எடுத்து வந்தனர்.
அவரது மனைவி இதை ஏற்க மறுத்தார். ஆனால், ‘இந்த நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியானவை. இதை ஏற்க முடியாது என யாரும் கூற முடியாது’ என, தசரத் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
ஜீவனாம்ச தொகையை நாணயங்களாக செலுத்தக் கூடாது என கூற முடியாது. எனவே, இந்த நாணயங்களை ஒவ்வொரு பையிலும், 1,000 ரூபாய் இருக்கும்படி எண்ணி, 55 பைகளில் தனித் தனியாக கட்டிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement