நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார்.
நியூயார்க்கில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பி அவரை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். கைகளில் தேசியக் கொடியுடன் ஏந்தியபடி, சென்ற அவர்கள் பிரதமருடன் கைகுலுக்குவதில் ஆர்வம் செலுத்தினர்.
இதேபோல், பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியேயும் இந்திய வம்சாவளியினர் பலர் அவரை வரவேற்க காத்திருந்தனர். இதை அறிந்த பிரதமர், ஹோட்டல் அறைக்குள் செல்வதற்கு முன் சில மணித்துளிகள் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கி வரவேற்பை ஏற்றார்.
முன்னதாக, “நியூயார்க் நகரில் வந்துவிட்டேன். இங்கு நடக்கவிருக்கும் தலைவர்களுடனான உரையாடல் மற்றும் நாளை (ஜூன் 21 ஆம் தேதி) யோகா தின நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று நியூயார்க்கில் தரையிறங்கியதும் பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.
இன்று, முதல்கட்டமாக நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட 24 பேருடன் சந்திப்பு நடத்துகிறார் பிரதமர். இதில் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், வானியற்பியல் விஞ்ஞானி நீல் டி கிராஸ் டைசன் மற்றும் கிராமி விருது பெற்ற இந்திய-அமெரிக்க பாடகர் ஃபாலு (பல்குனி ஷா), உலக வங்கியின் மூத்த துணைத் தலைவர் பால் ரோமர், கணிதப் புள்ளியியல் நிபுணர் நிக்கோலஸ் நாசிம் தலேப், அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளர் ரே டாலியோ, எழுத்தாளர் ஜெஃப் ஸ்மித் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.