இங்கிலாந்து, கனடா, பாகிஸ்தான்- திடீரென ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவ்! சீக்கிய பயங்கரவாதிகள் கதை குளோஸ்!

டொரண்டோ: கனடா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்படுகிற சீக்கிய தீவிரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஆபரேஷன் இந்திய உளவுத்துறை நடத்தியதுதான் என சீக்கியர் அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளன.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி காலத்திலேயே இந்தியாவில் சீக்கிய பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. சீக்கிய பயங்கரவாதி பிந்தரன்வாலே உள்ளிட்ட பல நூறு சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நமது ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்தம் வெள்ளம் பாய்ந்தோடிய காலம். இதற்கு ஆகப் பெரும் விலையாக இந்திரா காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. அன்று இந்தியாவை விட்டு தப்பி ஓடியவர்கள்தான் சீக்கிய பயங்கரவாதிகள்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இந்திய அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர் இந்த பயங்கரவாதிகள். ஆனால் தங்களது சீக்கியர்களுக்கான தனிநாடு எனும் பிந்தரன்வாலே கனவை மட்டும் இந்த பயங்கரவாதிகள் கைவிடவில்லை. விமான குண்டுவெடிப்பு உள்ளிட்ட எத்தனையோ பயங்கரவாத செயல்களை அன்னிய மண்ணிலும் இந்திய மண்ணிலும் நிகழ்த்திக் கொண்டே இருந்தனர் 1990கள் வரை. அதன் பின்னர் மெல்ல மெல்ல பஞ்சாப் பயங்கரவாதம் செத்துப் போய் மைய நீரோட்ட அரசியலில் இணைந்தது.

பஞ்சாப் மாநிலம் அமைதி பூங்காவாக திகழ்வதை பொறுக்க முடியாத சீக்கிய பயங்கரவாதிகள் மீண்டும் புதிய புதிய பெயர்களில் இயக்கங்களைத் தொடங்கி இந்தியாவுக்குள் ஊடுருவி குழப்பங்களை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டினர். டெல்லியில் வறுத்தெடுத்த வெயில், வாட்டிய குளிர், உறைய வைத்த பனிக்கு நடுவே ஓராண்டு காலம் உயிரை கொடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்குள் ஊடுருவி பெரும் குழப்பம் விளைவித்ததும் சீக்கிய தீவிரவாதிகள்தான். பஞ்சாப்பில் மீண்டும் சீக்கிய தீவிரவாதம் தலையெடுத்து பேயாட்டம் போடத் தொடங்குவதற்குள் அதனை அடக்க வேண்டிய கட்டாயம் நமது நாட்டுக்கு தேவையானதாக இருந்தது. அதற்கான நடவடிக்கைகளை நாடு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்தான் இங்கிலாந்து. பாகிஸ்தான் மற்றும் கனடாவில் கடந்த சில மாதங்களில் சீக்கியர் பயங்கரவாதிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றனர்.

மே 6

பாகிஸ்தானின் லாகூர் நகரத்தின் சன் பிளவர் சொசைட்டி..

பெயர்: பரம்ஜித் சிங் பஞ்ச்வார்

இயக்கம்/பொறுப்பு: காலிஸ்தான் கமாண்டோ போர்ஸ், தலைவர்

மோட்டார் சைக்கிள் வந்த இரு மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த ரத்த சகதியில் மிதந்தது பரம்ஜித் சிங் பஞ்ச்வார் உடல்.

கடந்த வாரம்

இங்கிலாந்து தலைநகர் லண்டன்

பெயர்: அவ்தார் சிங் கண்டா

இயக்கம்/ பொறுப்பு: இந்தியாவில் கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங் கூட்டாளி.

திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விஷம் கொடுத்து அவ்தார்சிங் கொல்லப்பட்டதாக அறிவிப்பு.

ஜனவரி 2023

பாகிஸ்தான் லாகூர் அருகே குருத்வாரா

பெயர்: ஹர்மீத்சிங் என்ற ஹேப்பி பிஎச்டி

பின்னணி: பஞ்சாப் மாநிலத்தில் 2016-27ல் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை தேடி தேடி படுகொலை செய்ததால் தேடப்பட்டும் நபர்

லாகூர் குருத்வாரா அருகே மர்ம நபர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொலை

சில நாட்களுக்கு முன்

கனடா, சர்ரி குருத்வாரா

பெயர்: ஹர்தீப்சிங் நிஜார்

இயக்கம்/ பொறுப்பு: காலிஸ்தான் புலிப் படை தலைவர்

குருத்வாரா அருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொலை; சம்பவ இடத்திலேயே மரணம்.

– இப்படி இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா என உலகின் பல நாடுகளில் பதுங்கிக் கொண்டு இந்தியாவில் வாலாட்டிக் கொண்டிருந்த சீக்கிய பயங்கரவாதிகள் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்டதால் சீக்கிய தீவிரவாதிகள் குலை நடுங்கிப் போயுள்ளனர். இத்தனை படுகொலைகளையும் இந்திய உளவுத்துறை அமைப்புதான் திட்டமிட்டு ஸ்லீப்பர் செல்கள் மூலம் செய்திருக்கிறது என சீக்கியர் அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கின்றன. ஆனால் மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் இதுவரை தரப்படவில்லை.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.