மதுரை:
தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே பயங்கர மோதல்போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் அடித்துள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றது முதலாக, கோட்டைக்கும், ராஜ்பவனுக்கும் இடையேயான உறவு ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது; அரசு எடுக்கும் கொள்கை முடிவை விமர்சித்து பேசுவது; திமுகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக பொதுவெளியில் விமர்சிப்பது என ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
இதனால் ஆளுநரை அவ்வப்போது முதல்வர் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியது திமுகவினரை கொந்திளிக்கச் செய்துள்ளது. எனவே, ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மதிமுக ஒருபடி மேலே சென்று, ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலகக் கோரி கையெழுத்து இயக்கத்தையே நடத்தி வருகிறது.
இந்த சூழலில், மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட திமுக தொழிற்சங்க தலைவராக இருக்கும் மானகிரி கணேசனின் பெயரில் தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பாடுபட்டு நலத்திட்ட உதவிகள் கடைகோடி மக்கள் வரை சேர வேண்டும் என செயல்பட்டு வருகிறார். ஆனால், தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு இடையூறாக இருந்து வருகிறார். அவரை வரும் 27-ம் தேதிக்குள் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால் 28-ந்தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலையின் முன்பு தீக்குளித்து சாவேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதுடன் மதுரையில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.