காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் விஜய்-க்கு அரசியலில் ஆர்வம் இருப்பதை முன்பு இருந்தே காட்டிக்கொண்டு இருக்கிறார். இப்போது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மூலம் அந்த ஆசையை வெளிப்படுத்த தொடங்கி உள்ளார்.
அவர் அரசியலுக்கு மிகச் சீக்கிரமாக வருகிறார் என நினைக்கிறேன். விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அவரை தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பது பற்றி முடிவு எடுக்க வேண்டியது மேலிடம்தான். அவர் கட்சி தொடங்கினால் கண்டிப்பாக அவரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது புதிது அல்ல. பல தலைவர்கள் அரசியலில் வந்து சாதித்துள்ளனர். காலம் அதற்கு பதில் சொல்லும்.
அமலாக்கத்துறை அரசியல் நோக்கதோடு செயல்படுகிறது. 13 மணிநேரம் செந்தில் பாலாஜி சித்திரவதை செய்து, நள்ளிரவு நேரத்தில் கைது செய்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். மத்திய அரசு தாங்கள் ஆளாத மாநிலங்களுக்கு நெருக்கடி கொடுப்பது புதிது அல்ல. செந்தில் பாலாஜிக்கும் அதே நெருக்கடியை கொடுக்கிறார்கள். நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், நள்ளிரவு கைதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் முறைகளை தான் கண்டிக்கிறோம்.
கேரளா – தமிழகத்தை இணைக்கும் நான்குவழிச்சாலை பணி நடைபெற பாறை கற்கள் கிடைக்காமல் இருந்ததே காரணம். குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த குவாரிகள் தடைசெய்யப்பட்டு உள்ளதால் நமது மாவட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. தற்போது பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பணியை துவங்க வலியுறுத்தியுள்ளேன். 1,041 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது” என்றார்.