சென்னை: அஸ்வின்ஸ் படம் நிச்சயம் பதற வைக்கும் பேய் படமாக இருக்கும் என்று நடிகர் வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் அஸ்வின்ஸ் இப்படத்தில் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப், சிம்ரன் பரீக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.
வசந்த் ரவி: இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய வசந்த் ரவி, இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படமாகும். தரமணி, ராக்கி ஆகிய படங்களை முடித்துவிட்டு என்ன மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அப்போது தான் தருண் மூலமாக என்னைத் தேடி வந்த படம் தான் அஸ்வின்ஸ்.
அஸ்வின்ஸ்: ஹாரர் செய்ய வேண்டாம் என்று இருந்த என்னை இந்த கதை கேட்டதுமே நடிக்கலாம் என்று எண்ணம் வந்து விட்டது. தரமணி, ராக்கி படங்களுக்கு தந்த ஆதரவு போலவே, இந்தப் படத்தையும் நீங்கள் உங்கள் ஆதரவை தர வேண்டும். அஸ்வின்ஸ் படத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொடுத்தால் சந்தோஷப் படுவேன்.
முக்கியமான மெசேஜ்: ஏனெனில் படத்தின் இறுதியில் முக்கியமான மெசேஜ் உள்ளது. படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், ‘ஏ’ கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நெகட்டிவிட்டி குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என அவர்களுக்கான மெசேஜ் தான் இது. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள பாபிக்கு இது முக்கியமான படம்.
இது உங்கள் படம்: :விமலா ராமன், சரஸ்வதி, முரளி என அனைவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளர் விஜய் தான். அவருக்கு நன்றி. இந்த சினிமாத் துறையில் நான் பிரம்மித்து போய் பார்க்கிற ஒருவர் என்றால் அது சக்திவேலன் சார் தான். இவருடைய பேனரில் போனால் எல்லாப் படங்களும் நிச்சயம் வெற்றி தான். சினிமா தற்போதுள்ள சூழ்நிலையில் வருகிற சின்ன படங்கள் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. அஸ்வின்ஸ் என் படம் கிடையாது உங்கள் படம் என்றார்.