தென்காசி: ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் இருப்பதாக கூறி சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டையை சேர்ந்த கோமு என்பவரது மகன் பாலகிருஷ்ணன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் செங்கோட்டை நகர பொதுச்செயலாளராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் இவர் மீது தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் நான் வேலை செய்து வந்தேன். அங்கு வேலை முடிந்ததை தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பி, இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தேன். இந்நிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த கோமு என்பவரது மகன் பாலகிருஷ்ணன் என்னை அணுகி சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.
நான் போலீஸ் போன்ற தோற்றத்தில் இருப்பதாகவும், தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டு உள்ள நுண்ணறிவு உளவு பிரிவுக்கு ஆள் சேர்ப்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தான் ஐஜி போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் மூலம் அந்த பணியில் தன்னை சேர்த்து விடுவதாகவும் கூறி சிறிது சிறிதாக ரூ.40 லட்சம் பணம் பெற்றார்.
இந்த நிலையில் அவர் என்னை அழைத்து சிபிசிஐடி உளவுப்பிரிவில் சார்பு ஆய்வாளராக நான் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறி ஒரு பணி நியமன ஆணை ஒன்றையும் வழங்கினார். எனக்கு தெரிந்த ஒருவரிடம் அதனை காட்டியபோது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதையடுத்து எனது குடும்பத்தினருடன் சென்று பாலகிருஷ்ணனிடம் நான் பணத்தை திருப்பி கேட்டேன்.
அப்போது, பணமும் தர முடியாது, வேலையும் வாங்கித்தர முடியாது எனக்கூறி மிரட்டினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இந்த புகாரை கையிழுடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலகிருஷ்ணன் பார்த்தசாரதியிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது உறுதியானது. அவர் செங்கோட்டை பாஜக நகர பொதுச்செயலாளராக பதவியில் இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.