சென்னை: தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அப்துல் சமது ஆகியோர் அடங்கிய 16 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறுபான்மையினர் நலத் துறை செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அறிக்கை: தமிழக ஹஜ் கமிட்டிக்கு பின்வரும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெஎம்எச் அசன் மவுலானா, பி.அப்துல் சமது, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் சென்னையை சேர்ந்த பாத்திமா அகமது, எம்.தாவூத் பீ, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஜஹாங்கீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் இறையியல் மற்றும் சட்டம் தொடர்புடைய உறுப்பினர்களாக தருமபுரியை சேர்ந்த ஆலிம் எச்.பாசி கரீம், சென்னையை சேர்ந்த அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா பிரிவு தலைமை காஜி மவுலானா குலாம் முகமது மெகதி கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில், தமிழ்நாடு ஹஜ் சேவை சொசைட்டியின் பொருளாளர் ஏ.முகமது அஸ்ரப், பர்வீன் டிராவல்ஸ் தலைவர் ஏ.அப்சல், ஆம்பூரை சேர்ந்த சபீக் சபீல் நிறுவன பொது மேலாளர் கே.பிர்தாஸ் அகமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா, புரொபஷனல் கூரியர் நிறுவன மேலாண் இயக்குநர் எஸ்.அகமது மீரான் ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான், அரசு தரப்பு பிரதிநிதியாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் என்ற நிலையில், வேலைவாய்ப்பு துறை செயலர் முகமது நசிமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.