பாலிவுட் மற்றும் டிவி நட்சத்திரங்களுக்கு மேக்கப் கலைஞராக இருந்தவர் சாரா. மும்பையில் உள்ள அந்தேரி லோகண்ட்வாலாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பாந்த்ராவிற்கு மாற்றினார். முன்பு இருந்த வீட்டிற்கு வாடகை பாக்கி வைத்திருந்தார். இதனால் ரியல் எஸ்டேட் புரோக்கர் வாடகை கேட்பதற்காக சாராவிற்கு போன் செய்தார். ஆனால் சாரா போனை எடுக்கவில்லை.
இதனால் பாந்த்ராவில் உள்ள வீட்டிற்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் போன் செய்து பார்த்தார். ஆனாலும் போன் எடுக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து வீட்டு கதவை திறந்து பார்த்த போது உள்ளே சாரா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
அவரின் கையில் வெட்டு காயம் இருந்தது. அவரது உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் நாகாலாந்தை சேர்ந்தவர் ஆவார். நாகாலாந்தில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் அவரின் தாயார் கண்டுபிடிக்கப்பட்டு தகவல் கொடுக்கப்பட்டது. தாயார் தற்போது மும்பை வந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் அவரிடம் வழங்கப்பட்டது. இது குறித்து சாராவின் தாயார் ரோஜி கூறுகையில், “எனது மகள் எதையும் அதிகமாக என்னிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். ஆனால் சில நாள்களுக்கு முன்பு என்னிடம் போனில் பேசிய போது, ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அதோடு வங்கி அதிகாரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் இப்போது தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்று சாரா தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து சாராவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார். சாராவின் வீடு முழுக்க ரத்தமாக இருக்கிறது. அவரை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அபிஜித் மானே இது குறித்து கூறுகையில், “விபத்து மரணமாக வழக்கு பதிவு செய்திருக்கிறோம். பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.