பெங்களூரு:
வேட்புமனு தாக்கல்
75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், லட்சுமண் சவதி மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் சட்டசபை தேர்தலுக்கு முன்பு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பாபுராவ் சின்சனசூரின் பதவி காலம் வருகிற 2024-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி வரையும், ஆர்.சங்கரின் பதவி காலம் வருகிற 2026-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரையும், லட்சுமண் சவதியின் பதவி காலம் வருகிற 2028-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வரையும் உள்ளது.
அவர்கள் மூன்று பேருமே பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். அவர்களில் பாபுராவ் சின்சனசூர், லட்சுமண் சவதி ஆகியோர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். அதில் லட்சுமண் சவதி மட்டும் வெற்றி பெற்றார். பாபுராவ் சின்சனசூரும், சுயேச்சையாக போட்டியிட்ட ஆர்.சங்கரும் தோல்வி அடைந்தனர். அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவால் மேல்-சபையில் 3 இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த 3 இடங்களுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதற்கான வேட்புனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
மனுக்கள் பரிசீலனை
முதல் நாளில் தமிழ்நாட்டின் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். மனுக்கள் பரிசீலனையின்போது, அவரது மனு தள்ளுபடி ஆவது உறுதி. ஆளும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி என்.எஸ்.போசராஜ், திப்பண்ண கமக்கனூர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், என்.எஸ்.போசராஜ், திப்பண்ண கமக்கனூர் ஆகிய மூன்று 3 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் விசாலாட்சியிடம் அவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர், இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று (புதன்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களைவாபஸ் பெற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி.
முக்கிய மசோதாக்கள்
இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் போட்டி இருக்காது என்பதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேரும் போட்டியின்றி மேல்-சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 23-ந் தேதி மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும். இதன் மூலம் மேல்-சபையில் ஆளும் பா.ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கும்.
அதே நேரத்தில் பா.ஜனதா 34 பேருடன் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக திகழ்கிறது. 8 உறுப்பினர்களை கொண்ட ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவுடன் பா.ஜனதாவை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி மேல்-சபை தலைவராக நீடிப்பாா் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், மேல்-சபையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு தள்ளப்படும். அதனால் ஏதாவது செய்து, மேல்-சபையில் பெரும்பான்மை பலத்தை பெற காங்கிரஸ் முயற்சி செய்யும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.