Vijay: நான் ரெடிதான் வரவா… `புதுக்கோட்டை டு நீலாங்கரை' – விஜய் மக்கள் இயக்கம் உருவான கதை!

ஜூன் 17 ஆம் தேதி நடிகர் விஜய் கொடுத்த கல்வி விருதுகள் தான் இந்த வார இணையத்தின் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. ஜூன் 22 ஆம் (நாளை) தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் விஜய், அதற்கு முன்னதாக இப்படி ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தியிருப்பது சினிமா வட்டாரத்தையும் தாண்டி அரசியல்வாதிகளையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இது விஜய்யின் அரசியல் விஜயத்திற்கான முன்னோட்டம் என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்தாலும், இதற்கான விதை எப்போது போடப்பட்டது;  விஜய்யின் மக்கள் இயக்கம் இந்த நிலைக்கு வருவதற்கு என்னென்ன விஷயங்கள் செய்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நற்பணி மன்றக் கொடி

2008 ஆம் ஆண்டில் இருந்துதான் விஜய்க்கும் அரசியலுக்குமான ஆட்டம் ஆரம்பமானது என்றே சொல்லலாம். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ என தொடர்ந்து வசூலைக் குவிக்கும் வெற்றிப்படங்களை கொடுத்து ரஜினிக்கு அடுத்து விஜய்தான் என்கிற பேச்சு எழுந்த சமயம் அது. அதனாலோ என்னவோ ரஜினியிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி விஜய்யிடமும் கேட்கப்பட்டது, ‘எப்போ அரசியலுக்கு வருவீங்க’. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி ஆரம்பத்தில் இருந்தே விஜய்யை அதன் வழியில்தான் அழைத்து வந்தார் என்பதால், விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதனை உறுதிபடுத்திக்கொண்டே இருந்தது. அப்படித்தான் 2008 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய், அன்றைய தினம் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி, அதற்கென ஒரு கொடியையும் அறிவித்தார்.

‘உழைத்திடு… உயர்ந்திடு… உன்னால் முடியும்’ என்கிற ஸ்லோகனோடு தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. அதே வருடம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக விஜய் உண்ணாவிரதமும் இருந்தார். இதில் இருந்துதான் விஜய்யின் மீது அரசியல்வாதிகளின் பார்வை விழ ஆரம்பித்தது. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு எதிரே சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விஜய், ‘சினிமாவைத் தாண்டி இப்படி உணர்வுள்ள ரசிகர்கள் எனக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ எனப் பேசினார். 

ராகுல் காந்தி

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் விஜய் நற்பணி மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றித் தமிழகம் முழுவதும் சேலம், ஈரோடு என பல மாவட்டங்களுக்கு சென்று இயக்கத்தின் நிகழ்வுகளில் கலந்துகொண்டார் விஜய். அப்படி 2009 ஆம் ஆண்டு புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த விஜய், ‘அரசியல் எனும் கடலில் இறங்கணும்னா ஆழம் பார்க்கணும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் இந்த இயக்கத்தை நடத்தினால் என் குடும்பம் என் தொழிலைவிட இந்த கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’ என்றும்; புதுச்சேரியில், ‘அரசியல்தான் என் நோக்கம். ஆனால் நிதானமாக வருவேன்’ என்றும் பேசினார். 2009 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வைத்தியலிங்கம் தலைமையில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தினார், விஜய். அதே ஆண்டில் ராகுல் காந்தியையும் சந்தித்தார் விஜய். இந்தச் சந்திப்பிற்கு முன்னால் வரைக்கும் விஜய் திமுகவிற்குதான் ஆதரவாக இருக்கிறார் என்கிற ஒரு பிம்பம் இருந்தது.

ஆனால், விஜய்யின் இந்தத் தனிப்பட்ட சந்திப்புகள் காரணமாக அவருக்கு நெருக்கடிகளும் வந்தன. அப்படித்தான் 2011 ஆம் ஆண்டு விஜய்யின் ‘காவலன்’ படத்தின் வெளியீட்டின் போது சிக்கல்களை ஏற்படுத்தி, படத்தின் ரிலீஸை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தன. இந்த சமயத்தில் விஜய் அதிமுக விற்கு ஆதரவானார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக இருப்பேன் என்று கூறினார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றப்பிறகு விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தில், ‘நான் ஆளும்கட்சி’ என்றும் வசனம் பேசியிருப்பார். அதேப்போல், 2011 ஆம் ஆண்டு அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத்திற்கு சென்று, ‘ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று இங்கு வந்தேன்’ என்றார். 

விஜய்

இப்படி அதிமுகவுடன் நல்ல உறவில் இருந்த விஜய்க்கு, 2013 ஆம் ஆண்டு ‘தலைவா’ படம் மூலம் அதிலும் விரிசல் வந்தது. இந்தப் படத்தில் பெயர் துவங்கி அதன் கேப்ஷனாக `Time to Lead’ என இருந்தது; படத்தின் டிரெய்லரில் பேசிய வசனங்கள் என பல விஷயங்கள் அதிமுகவினரையும் அப்செட்டாக்கியது. அதனால் ‘தலைவா’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யவிடாமல் பிரச்னையும் கிளம்பியது. மற்ற மாநிலங்களில் ரிலீஸாகி 12 நாள்களுக்குப் பிறகுதான் தமிழகத்தில் வெளியானது.

இது தொடர்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயன்றும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால், விஜய் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அதிமுகவின் ஆட்சியை புகழ்ந்து பேசியிருப்பார். அதன் பிறகுதான் படம் தமிழ்நாட்டில் வெளியானது. இந்த பிரச்னையினால் விஜய்யும் அதன் பிறகு அதிமுகவுடன் நட்புறவில் இல்லை. இதற்கு பிறகுதான் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த நரேந்திர மோடியை விஜய் சந்தித்தார். 

விஜய், மோடி

‘இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது’ என கூறிய விஜய், அதன்பிறகு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டார். அப்படியிருந்தும் அவரது படங்களின் ரிலீஸின் போது சில பிரச்னைகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. அதில் ‘மெர்சல்’ படம் மூலம் விஜய்க்கு ஸ்டேட் மற்றும் சென்ட்ரல் என இரு பெரும் கட்சிகளில் இருந்து பிரச்னை வந்தது என்றே சொல்லலாம். ‘இளைய தளபதி’யாக இருந்த விஜய் ‘மெர்சல்’ படம் மூலம் ‘தளபதி’ விஜய் என்று போட்டுக்கொண்டது திமுகவினர் மத்தியிலும் படத்தில் ஜிஎஸ்டி குறித்து பேசிய வசனத்தால் பாஜகவினர் மத்தியிலும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. திமுகவை விட பாஜகவினர் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஹெச்.ராஜா ‘ஜோசப் விஜய்’ என மதரீதியான பிரச்னையை கிளப்புவது போல் பேசியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேப்போல் விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக நெய்வேலியில் இருந்தப்போது அவரது அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் வருமான வரி சோதனை நடந்தது. அதற்காக அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தது; விஜய்யை நடத்திய விதம் என எல்லாமே கொஞ்சம் கடுமையாக இருந்தது என்றே சொல்லலாம். விசாரணை முடிந்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்று அவர் மீண்டும் நெய்வேலிக்கு வந்தப்போது, ரசிகர்கள் அவருக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தார்கள். 

விஜய் நெய்வேலி செல்ஃபி

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தார். இதனால், கோபமடைந்த விஜய், ‘எனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை’ என அறிக்கை வெளியிட்டார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து எஸ்.ஏ.சி மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டார். அதன்பிறகு விஜய்தான் மக்கள் இயக்கத்தை தனியாக இயக்கி வருகிறார், விஜய்.

விஜய்,புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த்தான் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் தொடக்கத்தின் முதல் கட்டமாக 2022 ஆம் ஆண்டு தமிழ்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் போட்டியிட்டு, அதில் 120 க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றார்கள். அவர்கள் அனைவரையும் விஜய் நேரில் அழைத்து வாழ்த்தினார். 

இதன் தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப், பேஸ்ஃபுக், ட்விட்டர் பக்கங்கள் திறக்கப்பட்டன. அதில் இயக்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கத்தினர்களை சென்னைக்கு வரவழைத்து தொடர்ந்து பேசி வருகிறார்.

வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர்

அப்படித்தான் இந்த வருடம் கல்வி விருதுகள் கொடுக்கலாம் என்பதையும் கூட்டத்தில் பேசி முடிவு செய்து, 234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவ – மாணவியர்களையும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து அவர்களை பாராட்டி, பரிசும் கொடுத்தார்.

விஜய் கல்வி விருதுகள்

இந்த நிகழ்வு மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பாஸிட்டிவ்வாக பேசிவருவதால் விஜய் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறாராம். இவரின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துத்தான் விஜய் காய் நகர்த்துகிறார் என்கிறார்கள். அதற்கு ஏற்றார்போல் சமீபத்தில் வந்த ‘லியோ’ படத்தின் பாடலிலும், ‘நான் ரெடிதான் வரவா; அண்ணன் நான் இறங்கி/தனியா வரவா; தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா; எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா’ என விஜய் பாடியிருக்கிறார். விஜய்யின் எதிர்காலத் திட்டம் என்ன என்பதற்காக படத்தின் அப்டேட் போலவே காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.