சென்னை: தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று (ஜூன் 21) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று (ஜூன் 20)காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை தரமணி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 8 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. சென்னைஅயனாவரம், டிஜிபி அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை நகரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.