ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் முக்கிய கலந்துரையாடல் நேற்றையதினம் (20) காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு மற்றும் வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 120 பெண் தொழில் முயற்சியாளர்கள் இக் கலந்துரையாடலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்குவதன் மூலம் பெண்களை பொருளாதாரத்தில் ஒரு ஸ்திர தன்மையில் வைத்திருக்கும் நோக்கில் இவ் செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வாழ்வாதார உதவி மற்றும் சுகாதார உதவி, திறன்விருத்தி, வியாபார நுட்பங்களை கற்றுக் கொடுத்தல், இணையவழி வியாபார நடைமுறை நுட்பம் முதலான விடயங்களை பெண் தொழில் முயற்சியாளர்களக்கு வழங்க இத்திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய முயற்சிகளின் நோக்கம் எமது நாட்டின் பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுவானவர்களாக மாற்றியமைப்பதே ஆகும்.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் பிரிவின் திட்ட அதிகாரி நெமானிகா அமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் பிரிவின் திட்ட அலுவலகர் பிரதீபா கலசேகர, முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்த், வெலிஓயா பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், JSAC நிறுவனத்தின் இணைப்பாளர் மற்றும் முகாமையாளர், பெண்கள் அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.