
தமிழ் சினிமாவில் 'நம்பர் 1' யார் ? மீண்டும் ஆரம்பமாகும் சண்டை
தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்ற சண்டை அவ்வப்போது வந்து போகும். ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கடந்த பல வருடங்களாக இருக்கிறார். ஆனால், விஜய் நடித்த 'வாரிசு' படம் வெளிவந்த போது அந்த சண்டை மீண்டும் ஆரம்பமாகி, அடங்கிப் போனது.
இப்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் யார், அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்ற சண்டை ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'வாரிசு' படத்தில் அவர் சுமார் 100 கோடி சம்பளம் வாங்கியதாக ஒரு தகவல் வெளியானது. அடுத்து அவர் நடித்து வரும் 'லியோ' படத்திற்கான சம்பளம் 120 கோடி என்றும் சொல்கிறார்கள். இந்த ஆண்டில் சினிமா மூலமாக அவருடைய வருமானம் இதுதான்.
ரஜினிகாந்த் இந்த ஆண்டில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அதற்காக 120 கோடி வரை சம்பளம் கொடுத்திருக்கலாம் என்கிறார்கள். அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்திற்காக சில பல கோடிகளே வாங்கியிருப்பார் என்று தகவல்.
அதே சமயம் கமல்ஹாசன் இந்த ஆண்டிற்காக வாங்கிய, வாங்கும், வாங்கப் போகும் சம்பளம் மற்ற நடிகர்களை விடவும் அதிகம் என கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். 'இந்தியன் 2', மணிரத்னம் படம், பிக்பாஸ் தொகுப்பிற்கான சம்பளம், புராஜக்ட் கே படத்தில் நடித்தால் அதற்கான சம்பளம்' என இந்த ஆண்டில் அவருக்குக் கிடைத்த வருமானம் மட்டும் சில நூறு கோடிகள் என்கிறார்கள்.
நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமல்லாது, சிவகார்த்திகேயன், சிலம்பரசன் படங்களையும் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்கள். கமலின் சம்பளம், வருமானம் என ரசிகர்கள் பகிர்வதைப் பார்த்து வருமான வரி சோதனையை அவர்களே வரவழைத்து விடுவார்கள் போலிருக்கிறது.