நடிகர் விஜய்தான் தற்போது திரை வட்டாரத்தில் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். கடந்த வாரம், அவர் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த விழா பெரும் பேசுபொருளாகி இருக்கிறது. இது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்துகிறது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த அலை ஓய்வதற்குள் `லியோ’ படத்தின் `நா ரெடி தா வரவா…’ பாடல் புரொமோ யூடியூப்பில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.
‘லோகேஷ் – விஜய் – அனிருத்’ கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. போஸ்டர், புகைப்படம், புரொமோ என எது வெளியானாலும் அதை ‘டிகோட்’ செய்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தப் புரொமோவில் இடம்பெற்றிருக்கும் பாடலின் நான்கு வரிகளை ரசிகர்கள் ‘டிகோட்’ செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அவற்றில்,
‘நா ரெடி தா வரவா… அண்ணன் நா இறங்கி வரவா…’
வரிகள் விஜய்யின் அரசியல் வருகையைக் குறிப்பதாகவும்,
‘அண்ணன் நா தனியா வரவா…’
வரிகள் கூட்டணியில்லாமல் தனியாக அரசியலில் களமிறங்குவதைக் குறிப்பதாகவும் கூறிவருகின்றனர்.
மேலும், இப்படம் லோகேஷின் ‘LCU’வில் வருமா இல்லையா என்பது சந்தேகமாக இருந்து வந்த நிலையில்,
‘தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா… எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…’
என்ற வரிகள் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘ரோலக்ஸ்’ பாத்திரத்தை அடையாளப்படுத்தும் விதமாக ‘தேள்’ குறியீட்டை தொடர்புப்படுத்துவதால் ‘லியோ’ LCU-வில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல, ரோலக்ஸ் vs லியோ கிளாஷ் வாய்ப்பிருப்பதாகச் சிலர் தெரிவிக்க, ரோலக்ஸும் லியோவும் ஒரே டீம், இருவருமே வில்லன்கள் என்று மற்றொரு தரப்பு கூறி வருகிறது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புகளும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதன் முழு பாடல் வரும் ஜூன் 22ம் தேதி (நாளை) விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகவுள்ள நிலையில் அதில் என்னவெல்லாம் இடம்பெற்றிருக்கும், ரசிகர்கள் அதை எப்படியெல்லாம் `டிகோட்’ செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.