பாஜக உடனான கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் அதிமுக – பாஜக கூட்டணி உடைந்து விடுமோ என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் தற்போது விசாரிக்கையில் விவகாரம் வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறதாக சொல்கிறார்கள்.
எடப்பாடியை சீண்டும் அண்ணாமலைஅதிமுகவை உரசிப் பார்க்காமல் தமிழ்நாட்டில் தன்னால் கால் ஊண்ற முடியாது என நினைக்கிறாராம் அண்ணாமலை. அதிலும் கொங்கு மண்டலத்தில் இருந்து தமிழக அரசியலுக்கு வந்த அவர் அதே கொங்கு மண்டலத்தில் கோலோச்சும் எடப்பாடி பழனிசாமியை போட்டியாக கருதுகிறாராம். எனவே அவ்வப்போது அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் தொட்டு விளையாடுகிறாராம் அண்ணாமலை. இந்த சூழலில் ஜெயலலிதாவை விமர்சித்தது அதிமுகவினரை சீண்டிப் பார்க்கும் வகையில் அமைந்தது.
பாஜக எதிர்ப்பில் பம்மும் வேலுமணி?இதன் நீட்சியாகவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம், ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலைக்கு எதிராக காட்டமாக பேசியது போன்றவை நடந்தது. அதிமுக தரப்பில் பலர் எதிர்ப்பை பதிவு செய்த போதும் எடப்பாடி பழனிசாமியின் தளபதிகளாக வலம் வரும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சைலண்ட் மோடுக்கு சென்று விட்டனர்.
பாஜகவை எதிர்ப்பவர்கள் யார்?சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பாஜக கூட்டணியை கை கழுவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு வெளியே வந்தால் அதிமுகவுக்கு வந்து கொண்டிருந்த சிறுபான்மையினர் வாக்குகள் மீண்டும் கிடைக்கும். அவர்களை ஏன் நாம் தூக்கிச் சுமக்க வேண்டும்? கூட்டணிக்கு அவர்கள் மட்டுமல்லாமல் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரையும் அழைத்து வருவார்கள். இதை தடுக்க முடியாது, எனவே கூட்டணியே வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்.
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மாஸ்டர் பிளான்!ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் வேறு மாதிரியாக சொன்னதாக கூறுகிறார்கள். செந்தில் பாலாஜி கைது விவகாரம் மூலம் பாஜக திமுகவை தற்போது குறி வைத்திருக்கலாம். ஆனால் எந்நேரமும் அவர்களது குறி நம்மை நோக்கி திரும்பலாம். அண்ணாமலை அவசர கதியில் பேசுவது எல்லாம் திமுக விஷயத்தில் நடந்துள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். அவரை தள்ளி வைத்தால் நமக்கு தான் ஆபத்து. எனவே எவ்வளவு தூரம் அவர்கள் அருகில் செல்கிறோமோ அவ்வளவு தூரம் நமக்கு நன்மை என்று பேசியுள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் நாற்காலி!
அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் நாற்காலியும் டெல்லியின் பார்வை இருந்தால் மட்டுமே தப்பும் என்றும் இரு மாஜி அமைச்சர்களும் வலியுறுத்தியதாக சொல்கிறார்கள். அதன் பின்னரே பாஜகவை விட்டு திமுகவை நோக்கி எதிர்ப்பை வலுவாக காட்டுவோம் என்று எடப்பாடி பழனிசாமியும் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.