ஐக்கிய அமெரிக்காவின் Helpline Lanka 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை நேற்று (20) சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுஙவினால் குறிப்பிட்ட மருந்து தொகை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வழங்கிவைக்கப்பட்டது. அவற்றில் ஒவ்வாமை, கொலஸ்ட்ரால், மயக்க மருந்து, மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் உட்பட 32 வகையான மருந்துகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளித்து உதவிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்நிகழ்வின் போது குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் தொற்றுநோய் ஏற்பட்ட காலத்திலிருந்தே அனைத்து நாடுகளும் நட்புறவாக இருந்து எல்லா வழிகளிலும் பல உதவிகளை வழங்கிவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கிடைக்கின்ற மருந்துப் பொருட்களை சுங்கத்தில் இருந்து அகற்றுவதற்கு எடுக்கும் காலத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், நண்கொடையாக பெறப்படும் மருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பெரும்பாலும் அவர்களது கோப்புகள் மற்றும் மொழிப்பிரச்சினைகள் இதற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், நாடுகளுடன் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் அந்த பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் எனறும் அமைச்சர்; மேலும், தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சாங் இங்கு உரையாற்றுகையில், நட்பு நாடு என்ற வகையில், எதிர்காலத்தில் இலங்கைக்கு கூடுதல் உதவிகளை வழங்க அமெரிக்கா முயற்சிக்கும் என்றும் கூறினார்.