மும்பை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றிருந்த தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரட்டலாக உருவாகும் தனுஷின் பாலிவுட் மூவி:தனுஷின் லைன்அப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளன. தற்போது அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லரில் நடித்து வரும் தனுஷ், அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல், தனது 50வது படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்ற தனுஷ், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யை சந்தித்தார். தமிழில் வெற்றிமாறன் போல, இந்தியில் தனுஷுக்கு வாழ்வு கொடுத்தவர் ஆனந்த் எல் ராய் தான். இருவரது கூட்டணியில் வெளியான ரஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ரஞ்சனா தமிழில் அம்பிகாபதி என்ற டைட்டிலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவான இந்த 2 படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது பாலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தனுஷ் – ஆனந்த் எல் ராய் இணையும் படத்தின் ப்ரோமோ ஷூட் மும்பையில் நடைபெற்றுள்ளது. மேலும், இது பான் இந்தியா படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் வழக்கமாக ரொமான்ஸில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி, இந்தமுறை ஆக்ஷனிலும் சம்பவம் செய்ய காத்திருக்கிறார்களாம். அதாவது ஏர் போர்ஸ் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷ் பைலட்டாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதன்படி தீபிகா படுகோன், ஆலியா பட் இருவரில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ரொமான்ஸ் படமாக இருந்தாலும் தனுஷுக்காக தரமான ஆக்ஷன் காட்சிகளை வைக்க ஆனந்த் எல் ராய் திட்டமிட்டுள்ளாராம். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது.