நியூயார்க்: அமெரிக்கா வருகை தந்துள்ள இந்திய பிரதமர் மோடி இன்று அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் இன்றைய சந்திப்புகள்:
புத்த அறிஞர் ராபர் துர்மன்: அமெரிக்க புத்தமத அறிஞரும், எழுத்தாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.
சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதில் புத்தமதக் கொள்கைகள் எவ்வாறு வழிகாட்டும் என்பது குறித்து பிரதமரும், பேராசிரியர் துர்மனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியாவின் புத்தமதத் தொடர்பு, புத்த பராம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
புள்ளியியல் வல்லுநர் நிக்கோலஸ் டேலப்: அமெரிக்க கணித புள்ளியியல் நிபுணரும், கல்வியாளரும், பொது நுண்ணறிவாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் நிக்கோலஸ் டேலப்பை, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார். சிறந்த கருத்துக்கள் மூலம் சிக்கலான, ஆபத்தான சூழ்நிலைகளில் நல்ல தீர்வுகளை அளித்து பொது நுண்ணறிவாளராக வெற்றியாளராகத் திகழும் பேராசிரியர் டேலப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். பேராசிரியர் டேலப்புடனான உரையாடலின் போது இந்திய இளைய தொழில் முனைவோரின் கடினமான சூழலை எதிர்கொள்ளும் திறன் மற்றும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் ஸ்டார்ட்அப் சூழல் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.
பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளரும் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் எனப்படும் நிதி மேலாண்மை நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராய் டாலியோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, நிதி சார்ந்த புகார்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக குறைத்திருப்பது உள்ளிட்ட வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு டாலியோ-விற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க கல்வியாளர்கள்: அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல அமெரிக்க கல்வியாளர்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தக் கல்வியாளர்கள், வேளாண்மை, சந்தைப்படுத்துதல், பொறியியல், சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், கல்வி சார்ந்த இருவழிப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் பற்றி இவர்கள் விவாதித்தனர்.
தங்களின் துறை சார்ந்த நிபுணத்துவம் குறித்து கண்ணோட்டங்கள் மற்றும் அனுபவங்களைப் பிரதமருடன் கல்வியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற கல்வியாளர்கள் பற்றிய விவரம்:
திருமதி சந்திரிகா டாண்டன், நியூயார்க் பல்கலைக்கழக டாண்டன் பொறியியல் பள்ளியின் வாரியத் தலைவர்.
டாக்டர் நீலி பெண்டாபுடி, பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத் தலைவர்.
டாக்டர் பிரதீப் கோஸ்லா, சான்டியோகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேந்தர்.
டாக்டர் சதீஷ் திரிபாதி, பஃபலோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் தலைவர்.
பேராசிரியர் ஜக்மோகன் ராஜூ, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்ட்டன் வணிகப்பள்ளியின் சந்தைப்படுத்துதல் துறை பேராசிரியர்.
டாக்டர் மாதவ் வி.ராஜன், சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகத்திற்கான பூத் பள்ளியின் டீன்.
பேராசிரியர் ரத்தன் லால், நில அறிவியலில் புகழ் பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்; ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கார்பன் நிர்வாகம் மற்றும் முறைப்படுத்தலுக்கான ரத்தன் லால் மையத்தின் இயக்குநர்.
டாக்டர் அனுராக் மரியாள், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இதய நாள மருத்துவத் துறையின் உதவிப் பேராசிரியர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய மையத்தில் பேராசிரியர் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வுத் தலைவர்.
ஃபால்குனி ஷா: அமெரிக்காவின் நியூயார்க்கில் பாடகரும், இசையமைப்பாளரும், கிராமி விருது பெற்றவருமான ஃபால்குனி ஷாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த, சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘அபண்டன்ஸ் இன் மில்லெட்ஸ்’ என்ற பாடலுக்காக திருமதி ஷாவைப் பிரதமர் பாராட்டினார். தமது இசையின் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் மக்களை ஒருங்கிணைத்து கொண்டுவந்ததற்காகவும் பிரதமர் அவரைப் பாராட்டினார்.