நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் யோகா செய்து அசத்தினார். முன்னதாக அவர் விழாவில் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை கவனத்தை ஈர்த்தது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். நியூயார்க் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா சபை தலைமை அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.
பிரதமர் மோடி வெள்ளை நிற டீசர்ட்(காலரில் நீலநிறம்), வெள்ளை நிற துண்டில் சிவப்பு நிற பார்டர் இருக்கும் துண்டு அணிந்து யோகா செய்தார். அதேபோல் உலக நாடுகளின் பிரதிநிதிகளும் பிரதமர் மோடி அணிந்திருந்த டீசர்ட்டை அணிந்து யோகா செய்து அசத்தினர். இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அணிவதற்காக 4150 டி சர்ட்டுகளை திருப்பூரை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம் தயார் செய்து அனுப்பி இருந்தது. முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்குமு் அனைத்து நாடுகளுக்கும் நன்றி. யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. உடல் ஆரோக்கியம் மற்றும் மனஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாக யோகா உள்ளது. யோகா இந்தியாவில் இருந்து வந்ததாக கூறுவதை விட மிகவும் பழமையான பாரம்பரியத்தை சேர்ந்தது என்று கூறலாம்.
யோகா என்பது எந்த காப்பி ரைட்டுக்கும் உட்படாதது. உடலுக்கு நல்லது. இலவசமாக கிடைக்கூடியது. உங்களின் உடலின் பிட்னஸ் லெவலை மேம்படுத்துகிறது. யோகா என்பது ஒரு திருவிழா போன்றது. யோகா பயிற்சியை தனியாகவும், கூட்டமாக இணைந்தும் செய்யலாம்.
யோகா அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இது அனைவருக்குமானது. அனைத்து பண்பாட்டுக்கும், மதத்துக்கும் உரியது தான் யோகா. யோகா செய்யும்போது உடல் ரீதியாக பிட்டாகவும், மனரீதியாகவும் அமைதியாகவும், உணரலாம். யோகா என்பது வாழ்க்கைக்கான நெறிமுறை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை தருவது தான் யோகா.
2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக நாம் கொண்டாடி வருகிறோம். இதனை முன்மொழிவு செய்தது இந்தியா தான். இதற்கு ஒட்டுமொத்த உலகமும் ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் யோகாவுக்காக ஒட்டுமொத்த உலகமும் இங்கு திரண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அறிஞர்கள் அறிவியல் பூர்வமாக யோகாவின் சிறப்பை கண்டறிந்து கூறியுள்ளனர். ஐநா சபைக்கு நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் மூலமாக யோகாவின் சக்தியை அறிந்து உலகத்துக்கு தெரிவிப்போம். நாம் அனைவரும் இணைந்து ஒரே பூமி, ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளை அடைவோம்” என பேசினார். அதாவது யோகா இந்தியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கு யோகா என்பது இந்தியாவுக்கு சொந்தமானது மட்டுமல்ல. உலக நாடுகளே பின்பற்ற வேண்டியது. இதற்கு காப்பி ரைட் எதுவும் இல்லை என பிரதமர் மோடி கூறி இந்த நிகழ்ச்சியில் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருந்தார்.