வாழ்க்கை விசித்திரமானது என்பார்கள். சிலருக்கு அது அற்புதங்களை அள்ளித் தருவதாக இருக்கும். சிலருக்கோ வேதனையான விநோதங்களை நிகழ்த்தும். இரண்டாவது ரகத்தில் ஒரு சம்பவம் சென்னையில் இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்தது.
எழுபது எண்பதுகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜியை வைத்துப் பல ஹிட் படங்களைத் தயாரித்தவர் ஜி.என்.வேலுமணி. ‘சரவணா ஃபிலிம்ஸ்’ என்கிற பேனரில் வெளியான ‘பாகப்பிரிவினை’, ‘பாலும் பழமும்’, ‘படகோட்டி’, ‘குடியிருந்த கோவில்’. ‘சந்திரோதயம்’ உள்ளிட்ட பல படங்கள் இவர் தயாரித்தவையே.
இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். மகன் சரவணன் பெயரில்தான் தயாரிப்பு நிறுவனம் இயங்கியது. இரண்டு மகள்களில் ஒருவரை இசையமைப்பாளரும் ‘வானத்தைப் போல’ முதலான சில சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஶ்ரீயின் தந்தையுமான சங்கர் கணேஷ் மணந்திருந்தார்.
இப்படி இருக்கிற சூழலில், கடந்த 18ம் தேதி வேலுமணியின் மகன் சரவணனின் மனைவி சாந்தி மரணமடைந்தார். பிசியான தயாரிப்பாளராக இருந்தபோதே வேலுமணி மகள்களைக் கட்டிக் கொடுத்து விட்டார். வேலுமணி மறைந்த ஒன்றரை ஆண்டிலேயே அவரது மகன் சரவணனும் இறந்து விட, சரவணனின் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டு விட்டது. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த சாந்தியின் மருத்துவச் செலவுக்கே அந்தக் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
சரவணனின் மகள் புவனியிடம் பேசினோம்.
“எங்க சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். அந்த ஊர்ல எங்களுக்குச் சொந்தமா தியேட்டர்லாம் இருந்தது. தாத்தா இருக்கும் போது சொத்து பத்துகளோட இருந்தோம். ஆனா அவர் இறந்த கொஞ்ச நாள்ல அந்த தியேட்டர்லாம் ஏலத்துல போயிடுச்சுன்னு சொன்னாங்க. நான் சின்னப் பொண்ணு. அம்மாவுக்கு என்ன நடக்குதுன்னு தெரியறதுக்குள்ளேயே நிலம் உட்பட எங்க சொத்துகள் பறிபோயிடுச்சு. ஏமாத்தியது யார்னு கூடக் கண்டுபிடிக்க முடியலை. சென்னையில அம்மாவும் நானும் வாடகை வீட்டுல இருந்தோம். எங்க கஷ்டத்தைச் சொல்லி முதலமைச்சரா ஜெயலலிதா அம்மா இருந்தப்ப கோட்டையில போய் ஒரு மனு கொடுத்தேன். ரெண்டாவது நாளே அதிகாரிங்க எங்க வீட்டுக்கு வந்தாங்க. அம்மா கூட்டிட்டு வரச் சொன்னதாச் சொன்னாங்க.
2016 செப்டம்பர் மாதம் நான் அம்மாவப் போய் பார்த்தேன். ‘உங்க அப்பா, தாத்தா எல்லாரும் எப்படி இருந்தவங்க, நீ ஏன் முன்னாடியே வந்து என்னைப் பார்க்கலை’னு கேட்டவங்க, கவலைப்படாமப் போ, நான் பார்த்துக்கிடுறேன்’னு சொன்னாங்க.
நான் அவங்களைப் பார்த்துட்டு வந்து ஒரே வாரம்தான் ஆச்சு. அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாம போய் மருத்துவமனையில அட்மிட் ஆகிட்டாங்க. அதோட அங்கேயே இருந்து இறந்தும் போனாங்க. அதனால அவங்க சொன்னதும் காத்தோட கரைஞ்சிடுச்சு.
இப்ப என் அம்மாவும் இறந்துட்டாங்க. நான் தனி மனுஷியா நிக்குறேன். நல்ல ஒரு வேலை கிடைச்சா சாப்பாட்டுக்கு உதவியா இருக்கும். இன்னைக்குத் தேதிக்கு எனக்கு அது போதும்னு நினைக்கிறேன்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல நடிகர் விஷால் தலைவராக இருந்த போது எங்க குடும்பத்துக்கு மாதம் ரூ.12,000 நிதியுதவி கிடைக்கும்படி செய்திருந்தார். ஆனால் விஷால் அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்தத் தொகையும் நின்னுடுச்சு.
அம்மா இறந்த அன்னைக்கு இறுதிக்காரியச் செலவுக்குக் கூட பணமில்லை. சில சினிமாக்காரர்கள்தான் தந்து உதவுனாங்க. நான் சொந்தக்காரங்க உட்பட யாரையும் குறை சொல்ல விரும்பலை. அவங்கவங்க வாழ்க்கையைப் பார்க்கத்தான் அவங்களுக்கு நேரமிருக்கும். எனக்கு நான் எதிர்பார்க்குற அந்தச் சின்ன உதவி கிடைச்சாலே போதும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கலாம்னு நினைச்சிருக்கேன். இவருமே சினிமாப் பின்னணியிலிருந்து வந்தவருங்கிறதால என் கஷ்டம் அவருக்குப் புரியும்னு நினைக்கிறேன். அவரைப் பார்த்தா மட்டுமே மிச்சமிருக்கிற என் வாழ்க்கையைக் கடத்த முடியும்னு நம்பறேன்” என்கிறார்.