சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவளவனுக்கு எப்படி தைரியம் வந்தது? என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கிண்டலாக கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த வாரம் 234 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இது அவரது அரசியல் பிரவேசமாகவே பலராலும் கருதப்படுகிறது. மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். விஜய்யின் இந்த பேச்சு பல விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் வித்திட்டது.
இதனிடையே, விஜய்யின் இந்த அரசியல் நகர்வு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினிடம் இதுபற்றி கேட்ட போது, “விஜய் நல்ல விஷயத்தை தானே சொல்லிருக்காரு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்றார். சீமானோ, “சினிமாவில் நடிப்பதை அரசியலுக்கு வருதற்கான தகுதி என நினைப்பது அவமானம்” என விமர்சித்தார்.
அந்த வரிசையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் திரையுலகைச் சேர்ந்தவர்கள், தங்கள் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், திருமாவளவனை சீண்டும் விதமாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தற்போது ஒரு ட்விட்டர் பதிவை போட்டிருக்கிறார். அந்த பதிவில், “உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடு என்று சொல்கிற அளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அட.. அது கூட பரவாயில்லை! ஆனால், ஒட்டுமொத்தமாக திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி கருணாநிதியை கூட விட்டு வைக்காமல் திருமாவளவன் இப்படி விமர்சித்து விட்டாரே! சரக்கிருக்கு, மிடுக்கிருக்கு என்கிறாரோ?” என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.