ஓவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படும் தேசிய கைத்தொழில் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தேசிய கைத்தொழில் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கமைய, கைத்தொழில் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் கண்காட்சி ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு;ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பங்களிப்புடன் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கபட்டுள்ளன.
இதேவேளை விவசாயத்துறை அமைச்சரின் பணிப்பின் பேரில் ஒழுங்கு செய்யப்படும் இந் நிகழ்ச்சித் திட்டமானது உலகளவிலான தொடர்பாடல் வலையமைப்பினை கொண்டு ஒழுங்கு செய்யப்படுவதுடன், ஒரே இடத்திலிருந்தே கைத்தொழில் மற்றும் விவசாயம் தொடர்பாக கைத்தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தலும், இறக்குமதியின் அளவைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க நாட்டின் இளைய தலைமுறையினரையும் விவசாயம் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்தும் நோக்கில் குறிப்பிட்ட நிகழ்ச்சி திட்டமானது ஒழுங்கமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.