நெல்லை:
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என இந்திய அரசியல் களத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
கூறியுள்ள கருத்து பரபரப்பையும், சர்ச்சையையும் பற்ற வைத்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இந்திய அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை இந்த முறை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை தனித்தனியாக நின்று வீழ்த்துவது முடியாத காரியம் என உணர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரள முடிவு செய்திருக்கின்றன. காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, நாளை மறுநாள் பீகாரில் மதசார்பற்ற கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அணி திரள்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அந்தந்த மாநிலக் கட்சிகள் வலுப்பெற வேண்டும் என விரும்புகிறேன். அப்படி அவர்கள் வலுவாக நின்று தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், யார் நாட்டை ஆள்வது என அவர்கள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். விபி சிங், ஐ.கே. குஜ்ரால், தேவேகவுடா போன்ற தலைவர்கள் ஆளும் போது எப்படி இருந்ததோ அப்படி செய்தால் தான் சரியாக இருக்கும்.
அதை விட்டுவிட்டு, தேர்தலுக்கு முன்பே பொது வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தினால் மோடி ஊதி தள்ளிட்டு போய்டுவாரு. அதனால், தேர்தலுக்கு பிறகு யாரை தலைவராக ஆக்குவது என்று முடிவெடுப்பதே சரியாக இருக்கும் என சீமான் கூறினார்.