புதுடெல்லி: அமைதியை நோக்கிய நமது தெரிவு என்பது குழந்தைகளின் மரபுரிமையான எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும், மணிப்பூரில் அமைதியும் நல்லிணக்கமும் வேண்டும் என்றும் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சின் நாடாளுமன்றத் தலைவருமான சோனியா காந்தி மணிப்பூர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பது: “மணிப்பூர் மாநில சகோதர சகோதரிகளே… சுமார் 50 நாட்களாக மணிப்பூரில் நடந்துவரும் மிகப் பெரிய மனித அவலத்துக்கு சாட்சியாக இருக்கின்றோம். முன்னெப்போதும் இல்லாத அளவிலான வன்முறை மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை சீரழித்து ஆயிரக்கணக்கானோரை அவர்களின் வேர்களை இழக்கச் செய்து தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டு தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த வாடுபவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிர்கதியாக்கப்பட்டுள்ள மக்களின் நிலையினைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
இணக்கமான முறையில் வாழ்ந்த சகோதர, சகோதரிகள் இன்று ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறி வன்முறையில் ஈடுபடுவதைப் பார்ப்பதது இதயத்தை மிகவும் நொறுக்குகிறது. மணிப்பூர் மக்கள் நீண்ட பாரம்பரியத்தையும், இணக்கமான வரலாறும் கொண்டவர்கள்.
அமைதியின் பாதையை நோக்கிய நகர்வு, நமது குழந்தைகளின் மரபுரிமையான எதிர்காலத்தை வடிவமைக்க உதவும். மணிப்பூர் மக்களிடம், குறிப்பாக அங்குள்ள எனது வீரமிக்க சகோதரிகளிடம் அங்கு அமைதியும் நல்லிணக்கமும் திரும்புவதற்கான நடைமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மணிப்பூர் மக்கள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது. இந்தச் சோதனையை நாம் ஒன்றாக கடந்து செல்வோம்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
The unprecedented violence that has devastated the lives of people in Manipur has left a deep wound in the conscience of our nation.
I am deeply saddened to see the people forced to flee the only place they call home.
I appeal for peace and harmony. Our choice to embark on the… pic.twitter.com/BDiuKyNGoe
— Congress (@INCIndia) June 21, 2023
முன்னதாக, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்கும் மைத்தி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.