சிவகங்கை: “மணிப்பூருக்குச் செல்ல விருப்பம் இல்லாததால் பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டானுக்கு சென்றுள்ளார்” என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் பெற தேவையில்லை என்பதை மாநில அரசுகள் வாபஸ் பெற்றாலும் பயனில்லை. வாபஸ் பெற்ற மேற்கு வங்கத்தில் சிபிஐ தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நீதிமன்றம் தான் தீர்வு கூற முடியும்.
மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைப்பதை வரவேற்கிறேன். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகேயுள்ள மதுக் கடைகளை மூடலாம். ஆனால், பூரண மதுவிலக்கு என்பது வெற்றி பெறாது. குஜராத்தில் மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் கூட அதிகளவில் மதுக் கடத்தல் நடக்கிறது.
அமலாக்கத் துறை இருப்பதே மனித உரிமை மீறல்தான். சிபிஐ விசாரணைக்கு வழிமுறைகள் இருக்கிறது. ஆனால், அமலாக்கத் துறைக்கு எந்த வழிமுறையும் இல்லை. இரு நபர்கள் பிரச்சினையை கூட எடுத்து விசாரிக்கிறது. தற்போது அடக்க முடியாத அடங்காபிடாரியாக உள்ளது. இது தொழில் செய்வதற்கும், அரசியல் சானத்துக்கும், தனிநபர் சுதந்திரத்துக்கும் ஆபத்தாக உள்ளது. அதற்கு சிபிஐயில் உள்ள பொருளாதார புலனாய்வு பிரிவை மேம்படுத்தலாம். கடந்த 2014-15-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்கு இந்த ஆட்சியில் அரசு அலுவலகத்தை சோதனையிடுவது அபத்தமானது. சோதனை மூலம் எந்த துப்பும் கிடைக்காது.
ஊடக விளம்பரத்துக்காக சோதனை நடத்தப்படுகிறது. ஆவணங்கள் அடிப்படையில்தான் விசாரணை நடக்கும். அதற்கு சம்மன் கொடுத்தே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம். சோதனை, கைது தேவையில்லாதது. இந்தியா அபாயகரமான பாதையில் இருந்து, அரசியல் சாசன பாதையில் செல்ல விரும்பும் கட்சிகள் இணைந்து கூட்டத்தை நடத்துகின்றனர்.
காங்கிரஸ் இந்தியை திணிப்பது கிடையாது. ஆனால் இந்தியை திணிப்பது பாஜகதான். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும், இந்தியில் பதில் தருவது பாஜகதான். இந்திய அரசியலில் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு பங்களிப்பு உண்டு. மணிப்பூருக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிரதமர் அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டானுக்கு சென்றுள்ளார்” என்று கூறினார்.