சென்னை: Vijay (விஜய்) ரஜினி மாதிரி தலையில் மொளகாய் அரைக்காமல் சீக்கிரம் வாங்க விஜய் அண்ணா என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார்.
லியோ படத்தில் நடித்துவரும் விஜய் அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கு இன்னும் பத்து நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். பீஸ்ட், வாரிசு படங்கள் கொடுத்த அப்செட்டை இந்தப் படம் மூலம் விஜய் தீர்த்துக்கொள்வார் என அவரது ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
முதல் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய் நாளை தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதனையொட்டி படத்திலிருந்து நா ரெடி என்ற முதல் சிங்கிள் வெளியாகும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதனையடுத்து அந்தப் பாடல் தொடர்பான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது. பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் அனிருத்தும், பிக்பாஸில் கலந்துகொண்ட அசல் கோலாரும் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிர்வை ஏற்படுத்திய வரிகள்: பாடல் ப்ரோமோ நா ரெடிதா வரவா அண்ணன் இறங்கி வரவா என ஆரம்பித்தது. பாடலின் வரிகளை கேட்ட ரசிகர்கள் நிச்சயம் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ்தான் வரும் என நேற்றிலிருந்து ஆருடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அதேபோல் ஒரு தரப்பினர் வரிகளை டீகோட் செய்து இந்த வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தனர்.
விஜய்யின் அரசியல் நகர்வு?: இதற்கிடையே 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களை கடந்த 17ஆம் தேதி நேரில் சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு சான்றிதழையும், 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் வழங்கினார். அது பாராட்டை பெற்றாலும் அந்த விழாவில் விஜய் பேச்சின் சில பகுதிகள் அவரது அரசியல் வருகைக்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்பட்டது என்ற விமர்சனத்தை பெற்றுத்தந்தது.
நிலைமை இப்படி இருக்க பாடலிலும் நா ரெடி அண்ணன் இறங்கி வரவா என்ற வரிகள் இடம்பெற்றதால் மாணவ, மாணவிகளுடனான மீட்டிங், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணவிக்க சொன்னது போன்றவற்றையும் இந்த வரிகளையும் ரசிகர்கள் முடிச்சு போட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த வரிகளை பகிர்ந்து ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அவர் அந்த ட்வீட்டில், “தலைவர் மாதிரி 25 வருசம் ரசிகர்களை ஏமாத்தி தலைல மொளகாய் அரைக்காம சீக்கிரமே வாங்கண்ணோவ். எங்களுக்கும் பொழுது போகும். நெறைய கண்டன்ட் கெடைக்கும்” என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு பின்னர் ஜகா வாங்கிவிட்டார். எனவே விஜய்யும் அப்படி செய்யக்கூடாது என்ற தொனியில் ப்ளூ சட்டை பதிவு செய்திருக்கும் இந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் அவருக்கு தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.