மகளின் லெஸ்பியன் 'பார்ட்னர்'.. மயக்கி கொலை செய்த தாய்.. உ.பி.யில் அதிர வைக்கும் சம்பவம்

லக்னோ:
மகளின் லெஸ்பியன் உறவு குறித்து அறிந்த தாயார், அவருடன் தொடர்பில் இருந்த இளம்பெண்ணை தந்திரமாக மயக்கி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது ஆகிறது. இவரும் இவரது கல்லூரித் தோழியான ப்ரீத்தி சாகர் (26) என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஒருகட்டத்தில், இவர்களுக்கு இடையேயான அதீத அன்பு எல்லை மீறி லெஸ்பியன் உறவாக மாறியது. தோழிகள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இருவருமே ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்கிற மனநிலையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில்தான், ப்ரீத்திக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்ய தொடங்கினர். ஆனால், பூனம் குமாரியை பிரிய முடியாமல் தவித்த ப்ரீத்தி, தனக்கு திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். இது அவரது தாயாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், மகளின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கிய போது, அவருக்கும், பூனம் குமாரிக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ப்ரீத்தியின் தாயார், இது குறித்து மகளிடம் விசாரிக்க, அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். மகளின் லெஸ்பியன் உறவு குறித்து வெளியே தெரியவந்தால் யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்களே என பயந்த ப்ரீத்தியின் தாயார் பூனம் குமாரியை தீர்த்துகட்ட முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த வாரம் பூனம் குமாரியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அவர், “உனக்கும், எனது மகளுக்கும் இடையேயான உறவு எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால் எங்கள் குடும்பத்தில் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் இதற்கு ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு மந்திரவாதி இருக்கிறார். அவரிடம் நீ சென்றால் உன்னை ஆணாக மாற்றி விடுவார். அதன் பின்னர் நீங்கள் இருவரும் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். மேலும், அந்த மந்திரவாதியின் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில், அந்த மந்திரவாதிக்கு போன் செய்த ப்ரீத்தியின் தாயார், பூனம்குமாரியை கொலை செய்யுமாறு கூறி ஒரு பெரிய தொகையையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், இந்த விஷயம் தெரியாத பூனம் குமாரி, தனது உயிர் தோழியான ப்ரீத்தியை திருமணம் செய்யும் ஆசையில் அந்த மந்திரவாதியிடம் சென்றிருக்கிறார். அந்த மந்திரவாதியும் பூனம் குமாரியை ஒரு காட்டுக்கு அழைத்து சென்று அவரது தலையை துண்டாக வெட்டி கொலை செய்து அங்கேயே அவரது சடலத்தை மறைத்து வைத்துள்ளான்.

இந்நிலையில், காணாமல் போன பூனம் குமாரி குறித்து அவரது அண்ணன் பர்விந்தர் குமார் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை தொடங்கியது. அப்போது பூனம் குமாரியின் செல்போன் பேச்சுகளை ஆய்வு செய்த போது இந்த பகீர் சம்பவம் குறித்த உண்மை போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த மந்திரவாதியை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ப்ரீத்தியின் குடும்பத்தினைரயும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.