‘விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ எனக் கோரி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி-யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான ப.குமார் பேசுகையில், “முதலமைச்சரிலிருந்து அமைச்சர்கள் வரை, அந்தத் துறைக்கு அமைச்சர்கள் என்பதை மறந்து, அந்தத் துறைக்கு உரிமையாளர்களைப்போல ஆண்டுக்கொண்டு ஊழல் செய்துவருகிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. அமலாக்கத்துறை ஒன்றும் கே.என்.நேருவுக்கோ, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கோ சலாம் போடுகின்ற திருச்சி மாநகர போலீஸ் மாதிரி அல்ல. அமலாக்கத்துறையினர் முதுகெலும்பு உள்ளவர்கள். அவர்கள் செந்தில் பாலாஜி ஊழலில் ஈடுபட்டது தெரிந்துதான் கைதுசெய்திருக்கிறார்கள்.
இன்றைக்குக்கூட செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். விசாரணை செய்தால்தான் அங்கு என்ன நடந்ததென்று தெரியவரும். காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை வைப்பதைவிட, அருகிலுள்ள கனிமொழி வீட்டிலேயே வைத்திருக்கலாம். ஏனென்றால், அந்த காவேரி மருத்துவமனை கனிமொழிக்குச் சொந்தமானது. திருச்சி தி.மு.க-வில் கே.என்.நேருவுடைய அராஜகமும், அவருடைய அடிபொடிகளுடைய அராஜகமும் அதிகமாக இருக்கிறது. கே.என்.நேருவுக்குச் சொந்தமான கல்லூரி, நம்முடைய ஆட்சிக்காலத்தில் ஏலம்விடப்படக் கூடிய சூழலில் இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்தக் கல்லூரிக்கு இருந்த கடனையெல்லாம் அடைத்ததோடு, இந்த இரண்டாண்டுக் காலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்தை கே.என்.நேரு சம்பாதித்திருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “கே.என்.நேருவுடைய ஒரு நாள் வருமானம் 7 கோடி ரூபாய் என்கின்றனர். இன்றைக்கு இருக்கின்ற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இவர்கள்மீது வழக்கு போடாது. ஆனால், எடப்பாடியார் முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போடும். அதனடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கி கே.என்.நேருவுடைய இதயத்தில் எத்தனை அடைப்புகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்துவிடும். அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் நிறைய ஊழல்களைச் செய்து வருகிறார். அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் இதயத்திலுள்ள அடைப்புகள் பார்க்கப்படும். இவர்கள் மட்டுமல்ல தி.மு.க-வில் உப்பு தின்றவர்கள் எல்லாம் தண்ணீர் குடிக்கின்ற காலம் வெகு விரைவில் வரும். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும், நம்முடைய வெற்றி உறுதி” என்றார்.