சென்னை:சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் 33. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு 40 என்பவரின் மனைவி ஜோதிக்கும் 30 இடையே திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் 2018 ஜூன் 19ல் அருண்குமாரை ஜோதி வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற அருண்குமார் ஜோதியை வெளியே அழைத்துள்ளார். அப்போது அங்கு ‘டிவி’ பார்த்து கொண்டிருந்த ராஜேஷ் 29 ஜோசுவா 20 ஜோதியின் கணவர் பாபு 40 வெங்கட சுப்பையா 58 மற்றும் ஜோதி சேர்ந்து அருண்குமாரை தாக்கினர்.
தொடர்ந்து கண்ணில் மிளகாய் பொடி துாவி ஐந்து பேரும் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் வெங்கட சுப்பையா இரும்பு ராடால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக அருண்குமாரின் தாய் சவுபாக்கியம்மாள் கொடுத்த புகாரின்படி ஜோதி உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கு.புவனேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு: குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ராஜேஷ் ஜோசுவா ஜோதியின் கணவர் பாபு வெங்கட சுப்பையா ஆகிய நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
தீர்ப்பு வழங்கிய நாளில் ஜோதி வராததால் அவர் மீதான வழக்கு பிரிக்கப்படுகிறது. ஜோதியை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement