சென்னை: “பொதுவாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமா என்ற பாப்புலாரிட்டியை வைத்துகொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு இருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கையொப்பம் பெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனிடம் அரசியலுக்கு வருவதற்கான நடிகர் விஜய்யின் முன்னெடுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் எந்தப் பருவத்திலும் வரலாம். அதில் தவறில்லை. ஆனால், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். கள வேலை செய்ய வேண்டும். பின்பு ஆட்சி குறித்து கனவு இருக்க வேண்டும்.
பொதுவாக, திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமா என்ற பாப்புலாரிட்டியை வைத்துகொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவில் மற்ற எங்கும் இப்படியில்லை. தமிழகத்தில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து, இறுதியில் மார்க்கெட் இல்லாதபோது அரசியலுக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து மக்களை எளிதாக கவர்ந்துவிடலாம் என நினைக்கிறார்கள். அப்படியில்லாமல் தொண்டுள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.
முற்போக்கான கருத்தியல் சார்ந்து களப்பணியாற்ற வேண்டும் என்பதுதான் தமிழகத்துக்கு தற்போது தேவையாக உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சினிமா நடிகர்கள் கடைசி காலத்தில் அதிகாரத்துக்கு வரலாம் என நினைப்பதில்லை. கேரளாவில் மம்மூட்டி இருக்கிறார், கர்நாடகாவில் ராஜ்குமார் இருந்தார், அபிதாப் பச்சன் என யாரும் அப்படி ஆசைப்படுவதில்லை. என்.டி.ராமாராவ், எம்ஜிஆர் இருவரையும் தவிர்த்து அந்த அடிப்படையில் வந்தவர்கள் பின்தங்கிவிட்டனர்.
திரைத் துறையில் இருப்பவர்கள் இத்தனை காலம் சம்பாதித்துவிட்டோம். இனிமேல் அரசியலுக்கு சென்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். இந்த கான்செப்ட் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. விஜய்க்கு மட்டும் சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். கோல்வால்க்கரை படிங்கள், சாவர்க்கரை படிங்கள் என்று சொல்லாமல் அம்பேத்கர், பெரியாரை படிக்க சொன்னதற்கு விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று திருமாவளவன் கூறினார்.