ஆபாச செய்தி, மிரட்டல்… : கணவர் மீது நடிகை ரட்சிதா போலீசில் புகார்
சின்னத்திரை நடிகையான ரட்சிதா மகாலட்சுமி, ‛பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி' போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர். கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சின்னத்திரை நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்த இவர் தற்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில் சென்னை, மாங்காடு மகளிர் போலீசில் ரட்சிதா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‛‛தினேஷை பிரிந்து நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். சில தினங்களாக எனது அலைபேசிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார் தினேஷ். அதோடு எனக்கு மிரட்டலும் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி தினேஷை அழைத்து மகளிர் போலீசார் விசாரித்து உள்ளனர். கணவரே மனைவி ரட்சிதாவிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பவது, மிரட்டல் விடுத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.