புதுடில்லி, கேரளாவின் கண்ணுாரில், பொதுமக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய மனு மீது, கேரள அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்த நிஹல் என்ற 11 வயதான மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள சிறுவனை, தெரு நாய்கள் கடித்து குதறியதில் கடந்த 11ம் தேதி உயிரிழந்தான்.
கண்ணுார் மாவட்டத்தில் தெரு நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய, வெறி பிடித்த நாய்களை கண்டறிந்து அவற்றை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, கண்ணுார் மாவட்ட பஞ்சாயத்து சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 7ம் தேதிக்குள் மனு மீது பதில் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூலை 12க்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement