வரிச்சியூர் செல்வம்… இந்த பெயரை கேட்டதும் மதுரை ரவுடியாச்சே? என்ற விஷயம் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். தற்போது தனது அடாவடிகளை விட்டு விட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இருப்பினும் இவரது நடவடிக்கையை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எஞ்சிய வழக்குகள் காரணமாக பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
விருதுநகர் போலீசார் விசாரணை
கடந்த சில மாதங்களாக வரிச்சியூர் செல்வம் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியே வரவில்லை. இந்நிலையில் திடீரென ஒரு செய்தி தீயாய் பரவத் தொடங்கியுள்ளது. விஷயம் இதுதான். வரிச்சியூர் செல்வத்தை இன்று காலை முதல் மதுரையில் வைத்து விருதுநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில் கடந்த 2021ஆம் ஆண்டு காணாமல் போனார்.
கூட்டாளி செந்தில் கொலை
அதன்பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செந்திலின் தொலைபேசியை ஆராய்ந்து பார்த்ததில் கடைசியாக வரிச்சியூர் செல்வம் மற்றும் சில கூட்டாளிகளுடன் பேசியது கண்டறியப்பட்டது.
அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண் கரட்
அதன் அடிப்படையில் தான் வரிச்சியூர் செல்வத்தை அழைத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண் கரட் தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் போலீசார் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளதாக மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொலைக்கான காரணம்?
வரிச்சியூர் செல்வத்திற்கும், கூட்டாளி செந்திலுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரகசிய திட்டம் போட்டு சென்னையில் வைத்து கொலை நடந்திருப்பதாக கூறுகின்றனர். இதில் வரிச்சியூர் செல்வத்திற்கு இருக்கும் பங்களிப்பு குறித்து வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
மீண்டும் வரும் சிக்கல்
இது ரவுடி வரிச்சியூர் செல்வத்தை மீண்டும் சிக்கலில் கொண்டு போய் விடக்கூடும் எனத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அளித்த பேட்டியில், முன்பு போல கட்டப் பஞ்சாயத்து விஷயங்களில் ஈடுபடுவது கிடையாது. வயதாகிவிட்டது. இனிமேல் ஆக்டீவாக இயங்க முடியாது. ஒவ்வொரு வழக்காக முடித்து கொள்ள பார்க்கிறேன்.
விசாரணை தீவிரம்
போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். அனைத்து வழக்குகளும் முடிவடைந்த பின்பு, பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கி விடுவேன். அதன்பிறகு நியூயார்க், லண்டன் போன்ற வெளிநாடுகளில் தான் தன்னை பார்க்க முடியும் என்று பேசியிருந்தார். ஆனால் அவரது கனவில் இடி விழுவது போல் பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கிடுக்குப்பிடி போடப்பட்டு வருகிறது.