சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு 6 நாட்கள் தங்கியிருக்கும் அவர், லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து பேசுகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளை கவனித்து வருகிறார். அனைத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்ட ஏற்பாடுகள், அந்த கூட்டங்களுக்கு தலைவர்கள், மத்திய அமைச்சர்களை வரவழைப்பது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், 6 நாள் பயணமாக அவர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானத்தில் லண்டன் புறப்பட்டு செல்கிறார். இது முழுக்க கட்சி ரீதியான பயணம். லண்டன் செல்லும் அண்ணாமலை, அங்கு உள்ள தமிழர்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேச உள்ளார். வரும் 29-ம் தேதி அவர் தமிழகம் திரும்ப உள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, அண்ணாமலை 2022 அக்டோபரில் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றார். கடந்த பிப்ரவரியில் இலங்கைக்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது.