சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ராவணனாக நடிக்க சைஃப் அலிகானை தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா என சக்திமானில் நடித்த முகேஷ் கண்ணா கொந்தளித்திருக்கிறார்.
ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது ஆதிபுருஷ் படம். பாகுபலி புகழ் பிரபாஸ், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்,கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடிக்க மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் படம் வெளியாகியிருக்கிறது.
நெகட்டிவ் விமர்சனம்: இந்தக் கால தலைமுறை ராமாயணத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அதனை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகளோ ரொம்பவே மோசமாக அமைந்து விட்டதென்று ரசிகர்கள் ஓபனாகவே கூறினர். ஓரிரு இடங்களில் பின்னணி இசை மட்டுமே ஆறுதல் அளிக்கிறது. கார்ட்டூன் சேனல் பார்ப்பது போல் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் சிலரோ பிரபாஸ் பார்ப்பதற்கு ராமர் போல இயேசுநாதர் போல இருக்கிறார் என கூறி மீம்ஸ்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை: படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் எவ்வளவுக்கு எவ்வளவு வந்துகொண்டிருக்கிறதோ அதேபோல் ஒருபக்கம் எதிர்ப்பும் வலுத்துவருகிறது. சீதை தொடர்பான வசனம், அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனம் போன்றவைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றனர். திரைப்பட தொழிலாளர் சங்கமோ ஒருபடி மேலே சென்று படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதியிருக்கிறது. நேபாளத்தில் படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டுவிட்டது.
சக்திமான் எதிர்ப்பு: இந்நிலையில் சக்திமான் நாடகத்தில் நடித்த முகேஷ் கண்ணா ஆதிபுருஷ் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ராவணன் பயங்கரமான ஆளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு பண்டிட். ராவணனை ஒருவரால் எப்படி இப்படி கற்பனை செய்து வடிவமைக்க முடியும் என்று அதிர்ச்சியாக உள்ளது. படம் அறிவிக்கப்பட்டபோது, அந்த கதாபாத்திரத்தை நகைச்சுவையாக மாற்றுவேன் என்று சைஃப் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.
கடத்தல் காரன்: அப்போது எங்கள் காவியத்தின் கதாபாத்திரங்களை மாற்ற நீ யார் என்று நினைத்தேன். உண்மை என்னவென்றால், ராவணனை நகைச்சுவையாக காட்ட தயாரிப்பாளர்கள் முயன்றுள்ளனர். சைஃப் அலிகானைவிட சிறந்த நடிகரை ஓம் ராவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இது ராவணனைப்போல் இல்லை. ஒரு மலிவான கடத்தல்காரனைப்போல இருக்கிறது.
அவர்களை எரிக்க வேண்டும்: நமது வேதத்தை இழிவுப்படுத்தும் உரிமையை கொடுத்தது யார்?. ஓம் ராவத்தும், மனோஜ் முண்டாஷிரும் ராமாயணம் படிக்காதவர்கள் என்று எனது சேனலில் சொல்லியிருக்கிறேன். இவர்கள் எடுத்திருப்பது முற்றிலும் குப்பை. அவர்களை மன்னிக்கவே கூடாது. இவ்வளவு நடந்த பிறகும் அவர்கள் வெளியில் வந்து விளக்கம் தருகிறார்கள். ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும். சனாதன தர்மத்துக்காக இதை செய்கிறோம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். உங்களது சனாதன தர்மம் எங்களிடமிருந்து வேறுபட்டதா என்ன? ” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆதிபுருஷ் படத்தின் வசூல் எவ்வளவு ?: இதற்கிடையே படத்துக்கு கிடைத்திருக்கும் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக வசூல் ரொம்பவே அடி வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம் இதுவரை 350 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆதிபுருஷ்ஷுக்கு வசூல் ரீதியாக ரொம்பவே பலத்த அடி என கூறப்படுகிறது.