புதுடெல்லி: டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதன் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர் ஒருவர் பணம் எதுவும் செலுத்தாமல் சுமார் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். இதனால் ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ‘ரோஸேட் ஹவுஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் தரப்பில், இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அங்குஷ் தத்தா என்பவர் ஓட்டலில் 603 நாட்கள் தங்கிவிட்டு ஒரு பைசா கூட கொடுக்காமல் சென்றுவிட்டதாகவும் இதனால்ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்புகாரின்படி, இந்த ஓட்டலில்,அறைக் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் வரவேற்பரையின் தலைமை ஊழியர் பிரேம் பிரகாஷுக்கு தரப்பட்டிருந்தது. அறையில் தங்கியிருப்பவர்களின் நிலுவைத் தொகையை கணினியில் கண்காணித்து வரவும் அவருக்கு அனுமதி தரப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்குஷ் தத்தா கடந்த 2019, மே 30-ம் தேதி ஓட்டலில் ஓர் இரவுக்கு மட்டும் அறை எடுத்துள்ளார். மறுநாள் அவர் அறையை காலி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் பணம் செலுத்தாமல் 2021, ஜனவரி 22-ம் தேதி வரை தங்கியுள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவர் 72 மணி நேரத்துக்கு மேல் நிலுவைத் தொகையை செலுத்தாவிடில் அதனை தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நிதிக் கட்டுப்பாட்டாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். ஆனால் பிரேம் பிரகாஷ் அவ்வாறு செய்யவில்லை.
ஓட்டலுக்கு அங்குஷ் தத்தா ரூ.10 லட்சம், ரூ.7 லட்சம் மற்றும்ரூ.20 லட்சம் என வெவ்வேறு தேதிகளில் காசோலை கொடுத்துள்ளார். இந்தக் காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டன. இதையும் ஓட்டல் நிர்வாகத்தின் கவனத்துக்கு பிரேம் பிரகாஷ் கொண்டு செல்லவில்லை. மேலும் ஓட்டலின் கணினி பதிவேடுகளில் அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து அங்குஷ் தத்தாவை நீண்ட காலம் தங்க அனுமதித்துள்ளார்.
இதற்காக அவர், அங்குஷ் தத்தாவிடம் இருந்து பணம் பெற்றிருக்கலாம் எனவும் ஓட்டலின் மற்ற சில ஊழியர்களும் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் எனவும் ஓட்டல்நிர்வாகம் சந்தேகிக்கிறது. புகார்தொடர்பாக விமான நிலைய போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அடுத்த கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.