பெங்களூரு: பெங்களூருவில் நள்ளிரவில் தேவாலயத்தின் பீடம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 29 வயது கிறிஸ்தவ இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள கம்மனஹள்ளியில் 10ஆம் பாயஸ் தேவாலயம் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு 3 மணியளவில் உள்ளே நுழைந்த நபர் ஆலயத்தின் பலி பீடம், நற்கருணை பேழை, சுரூபங்கள் ஆகியவற்றை கம்பியால் அடித்து நொறுக்கினார்.
இந்த சம்பவத்துக்குபின் களைப்புடன் வெளியே வந்தார். அப்போது தேவாலயத்தின் நுழைவாயிலில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை எழுப்பி, அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவானது.
காலை 6 மணியளவில் திருப்பலிக்காக கோயிலை திறந்தபோது பீடம் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதை கண்டு காவலாளி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பானஸ்வாடி காவல்நிலைய ஆய்வாளர் சந்தோஷ் குமார், பெங்களூரு கிழக்கு துணை காவல் ஆணையர் பீமசங்கர் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோவும் தேவாலயத்தை பார்வையிட்டார்.
இதுகுறித்து பெங்களூரு கிழக்கு துணை காவல் ஆணையர் பீமசங்கர் கூறுகையில், ”சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதே பகுதியைச் சேர்ந்த டாம் மேத்யூ (29) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மது போதையில் இதனை செய்துள்ளார். தேவலாயத்தின் நுழைவாயிலில் 4 மது பாக்கெட்டுகள் கிடந்தன. குடும்ப பிரச்சினையால் மனப்பிறழ்வு அடைந்துள்ள அவரை விசாரணை நடத்த முடியாத நிலை நிலவுகிறது”என்றார்.