சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 22) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 23, 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 7 செ.மீ.,நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 6 செ.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
அதேபோல, வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.