கேரளாவில் பதிவுத் திருமணங்களின்போது மணமக்களின் மதம் பற்றி எதுவும் ஆராயக்கூடாது, கேட்கக் கூடாது எனப் பதிவாளர்களுக்கு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த பி.ஆர்.லாலன், ஆயிஷா ஆகியோர் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தபோது, அவர்களின் மதம் பற்றி பதிவாளர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால், அவர்கள் தங்களின் மதத்தைப் பற்றி கூற மறுக்கவே, பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பி.ஆர்.லாலன், ஆயிஷா ஆகியோர் இந்த விவகாரத்தைக் கேரளா உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றனர்.
அதன் தொடர்ச்சியாக மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், “பதிவுத் திருமணம் செய்துகொள்ள வருபவர்களிடம், திருமணத்தைப் பதிவு செய்ய மதம் பற்றி பதிவாளர்கள் ஆராய வேண்டிய அவசியமில்லை. மேலும் மணமகன், மணமகளின் பெற்றோர்களின் மதம் பற்றியும் பதிவாளர்கள் கேட்கக்கூடாது. அதோடு, மணமக்களின் வயது மற்றும் இன்னபிற ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே திருமணத்தைப் பதிவாளர்கள் பதிவுசெய்ய வேண்டும்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திருமணங்களைப் பதிவுசெய்ய அதிகாரமுடைய பதிவாளர்கள், பதிவாளர் ஜெனரல்கள், தலைமைப் பதிவாளர் ஜெனரல் ஆகியோர் இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அத்தகைய பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.