சட்டம் இல்லாத நாடு இல்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன

ரூபா 420 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹொரணை, மதுராவளை உள்ளூராட்சி மன்ற கட்டிடத்தை நேற்று (21) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலும், மதுராவளை, பதுரலிய, வல்லாவிடவில் 738 காணி உறுதிப்பத்திரங்களை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இது எமது பழைய கிராமங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பகுதி. ஏற்றுமதி செய்யப்படும் இறப்பரின் அளவை புள்ளிவிபரங்களில் கணக்கிட்டால், புலத்சிங்களவிற்கு கிடைத்த அரசாங்க ஆதரவு மிகவும் குறைவு. புள்ளி விவரங்கள் தயாரிப்பதிலும், மீள் முதலீடு செய்வதிலும் ஏற்பட்டுள்ள இடைவெளியால், பிரதான நகரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்து, கிராமிய மக்களின் வாழ்க்கை மற்றும் வசதிகளின் அபிவிருத்தி குறைந்து வருவதால், குறிப்பிட்ட முதலீடுகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று வழங்கப்படும் காணி உரிமை மற்றுமொரு வெற்றியாகும்.

உங்கள் அனைவரினதும் பலத்தினால் நாங்கள் எதிர்கொண்ட இக்கட்டான காலங்களை எங்களால் வெற்றிகொள்ள முடிந்தது. சட்டம் இல்லாத நாடு இருக்க முடியாது. அராஜகத்தின் அடிப்படையில் வன்முறைக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு நாட்டை ஆட்சிசெய்ய முடியாது. எனவே, வன்முறையை நிராகரித்து, அகிம்சைக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டி பொருளாதாரப் பயணத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது.

நெருக்கடியில் இருந்து வெளிவர எங்களுக்கு பலம் கொடுத்த கிராமிய மக்கள் நாடு முழுவதும் உள்ளனர். எமது கிராமப்புற மக்களின் விவசாய நடவடிக்கைகளால், உபரியான உற்பத்தியை கொண்டுவர முடிந்தது. இது கிராமப்புற விவசாயிகளின் வெற்றி. அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்ததன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கை மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்தது. எமது நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை சர்வதேசத்தில் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு துறையும் புத்துயிர் பெற வேண்டும். பாடசாலையை விட்டு வெளியேறும் சகல மாணவர்களுக்கும் தமது அறிவை விருத்தி செய்து பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரசாங்கம் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற வேண்டும். எல்லாவற்றிலும் நாம் தன்னிறைவு அடைய முடியாது. ஆனால், ஏதாவது ஒரு விடயத்தில் தன்னிறைவு பெற்றால், அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைத்து, தன்னிறைவு பெற்ற கிராமத் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வரும் இக்காலத்தில் நாம் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, லலித் வர்ணகுமார, சஞ்சீவ எதிரிமான்ன, களுத்துறை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.