மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு மலேசிய உயர் ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமான சேவை மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதுடன், எயார் ஏசியா மற்றும் பதிக் எயார் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் கோலாலம்பூருக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவைகளை மேற்கொள்ள இணங்கியுள்ளன.
மலேசிய உயர் ஸ்தானிகர் திரு. பத்லி ஹிஷாம் ஆதம் நேற்று முன்தினம் (20) அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.
மலேசியாவிற்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சிலரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் மலேசிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாரிய போக்குவரத்துக்கு இலங்கை ஒரு முக்கிய விமான மையமாக இருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளர்ந்து வரும் ஹோட்டல் தொழில்துறைக்கு மேலதிகமாக, இலங்கையில் முதலீடு செய்வதற்கான புதிய துறைகளில் ஈடுபடுமாறு மலேசிய தொழில்முயற்சியாளர்களிடம் பிரதமர் கோரிக்கை விடுத்தார். அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் முதல் 6 முதலீட்டு பங்காளிகளில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய மலேசிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். மலேசியா புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் உட்பட 63,000 மலேசிய ரிங்கிட் அல்லது சுமார் 14,645 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.
உயர்மட்ட தொடர்புகள், வரலாற்று உறவுகள், மக்களிடையேயான தொடர்புகள், புவியியல் நெருக்கம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் ஆழமான பிணைப்புகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, மலேசிய உயர் ஸ்தானிகர் தனது அரசாங்கம் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பதை எதிர்பார்ப்பதாக கூறினார்.
2016 ஆம் ஆண்டில், மலேசியாவில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கைப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல், வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளும் கைச்சாத்திட்டன. இலங்கையர்களுக்கான மலேசிய வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை 10,000 ஆக உயர்த்தியதற்கு மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர், உற்பத்தி மற்றும் தாதியர் போன்ற புதிய துறைகளை வேலைவாய்ப்பு பட்டியலில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் அனூரின் இக்னேஷியஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு