செந்தில் பாலாஜியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சார்பாக சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகினர்.
காலையில் விசாரணை தொடங்கும் போதே தாங்கள் தான் முதலில் கருத்துக்களை முன்வைப்போம் என்று இரு தரப்பும் காரசாரமாக மோதின.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தங்கள் தரப்பு வாதங்களை முதலில் வைத்தார்.
“அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்பதை தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர். 2014 -15 இல் நடைபெற்ற சம்பவத்துக்கு திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் 2021ஆம் ஆண்டும் வழக்கு தொடரப்பட்டது ஏன்? செந்தில் பாலாஜிக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஆடிட்டர் நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்துள்ளார். செந்தில் பாலாஜி நேரடியாக ஒரு முறை ஆஜரானார். எனவே அனைத்து முறையும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் நள்ளிரவு 1.40 வரை என்ன நடந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை மூலமாகவே ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். ஆனால் நோயால் செந்தில் பாலாஜி பாதிக்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நான்கு அடைப்புகள் நீக்கப்பட்டன. பைபாஸ் சர்ஜரியை எப்படி போலியாக செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
ஒருவரின் நோய் பற்றி கேள்வி எழுப்ப முடியாது என்று அமலாக்கத்துறை சார்பாக வாதாடும் துஷார் மேத்தா ஒப்புக்கொண்டார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வரவேற்பு தெரிவித்தார்.
ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் என்.ஆர்.இளங்கோவை தொடர்ந்து துஷார் மேத்தா தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உள்ளார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.