இலங்கை மின்சார சபையில் தற்காலிக சேவையின் அடிப்படையில் பணிபுரியும் சுமார் 4000 ஊழியர்களும் எதிர்காலத்தில் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய நாட்களில் இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்படும் மனித வளங்கள் கணக்கெடுப்பு காரணமாக அவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இங்கு தொடர்ச்சியாக பணிபுரிந்தவர்களை எதிர்வரும் சில மாதங்களில் நிரந்தரமாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
இவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளும் பணிகள் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் இந்நிறுவனத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். ஏதிர்காலத்தில் இவர்கள் நிரந்தர வேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வு நடைமுறைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.
மேலும், மின்சார சபையின் மறுசீரமைப்பின் பின்னர் தற்போது பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அந்த புதிய நிறுவனங்களில் இடம் வழங்கப்படும். அதேவேளை, அவர்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட அதிக சம்பளம் வழங்கப்படும்.
அத்துடன், மின்சார சபையின் கீழ் தற்போது அனுபவிக்கும் வசதிகள் அவ்வாறே வழங்கப்படும். எதிர்காலத்தில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது. அதன்படி, தற்போது பணிபுரிபவர்கள் இந்த நிறுவனங்களில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.