பெங்களூரு சிட்டியை எப்படி வேற லெவலுக்கு மாத்துறது? ஐடியா சொல்ல இதோ சூப்பர் சான்ஸ்!

பெங்களூரு சிட்டி… இந்த பெயரை கேட்டதும் ஐடி நகரமாச்சே என்ற பதிலை பலரும் கூறுவதை கேட்கலாம். செம ஜில்லுனு இருக்குமாமே. கை நிறைய சம்பளம் தராங்களாம். சர்வதேச நிறுவனங்கள் ஏராளமாக வரிசை கட்டி இருக்கின்றன. அங்க போனா லைஃபே ஸ்டைலே மாறிடும் பாரேன் என இளைஞர்களுக்கு இன்றும் சிலர் அறிவுரை வழங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட நகரின் நிலைமையை கடந்த சில மாதங்களுக்கு பார்க்கையில் பலரும் வேதனை அடைந்தனர். பெருமழையால் தண்ணீரில் தத்தளித்தது.

தத்தளித்த பெங்களூரு

ஐடி ஊழியர்கள் ட்ராக்டரில் அலுவலகம் சென்றனர். சாலைகளில் வாகன ஓட்டிகள் தடுமாறினர். ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி பழுதடைந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெளியில் பொதுமக்கள் வர முடியாத அளவிற்கு தண்ணீர் சூழந்தது. இப்படி ஒவ்வொரு மழையும் பெங்களூருவிற்கு அக்னி பரீட்சையாகவே இருக்கிறது. எனவே இந்நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான
காங்கிரஸ்
அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பிராண்ட் பெங்களூரு திட்டம்

அதாவது, Brand Bengaluru என்ற பெயரில் இணையதளம் (
http://www.brandbengaluru.karnataka.gov.in/
) ஒன்றை தொடங்கி மக்களிடம் கருத்துகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா மக்கள், பெங்களூருவாசிகள், உலகெங்கும் வாழும் கன்னடர்கள், பெங்களூரு நகர் மீது பற்று கொண்டவர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். இந்த இணையதளத்தை துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்றைய தினம் கர்நாடகா சட்டமன்றத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், பெங்களூரு நகரின் மேம்பாட்டிற்கு பொதுமக்களின் கருத்துகள் மிகவும் முக்கியம்.

ஆலோசனை கேட்க முடிவு

இதற்காக பல்வேறு துறையினர், தொழில்துறையை சேர்ந்தவர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. வரும் நாட்களில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தப்படும். உரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் மக்களின் கருத்துகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இதுதவிர சென்னை, இந்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரில் சென்று சிறப்பான அம்சங்கள் குறிப்பெடுத்து கொள்ளப்படும்.

எதிர்பார்க்கப்படும் திட்டங்கள்

அதில் திடக்கழிவு மேலாண்மையும் ஓர் அங்கமாக இருக்கும். மேலும் நகரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்படும். இதுவரை தனக்கு கிடைத்த பரிந்துரைகளில் மிகப்பெரிய அளவிலான சாலைகள், மெட்ரோ ரயில் வசதிகளை நீட்டித்தல், மோனோ ரயில் திட்டம், புறநகர் ரயில் சேவை, மேம்பாலங்கள், நைஸ் சாலைகளை ரிங் சாலைகளாக மாற்றுதல், சுரங்க வழி சாலைகள் உள்ளிட்டவை வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்னும் 6 மாதங்களில்

மேலும் சுற்றுச்சூழல் தூய்மை, கழிவுநீர் அகற்றுதல், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி, காவேரி குடிநீர் விநியோகம், குடிசை பகுதிகள் மேம்பாடு, திறன் வாய்ந்த நிர்வாகம், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கின்றனர். அடுத்த 6 மாதங்களில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பெங்களூரு நகர மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.